சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேம்பனேரி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். இதற்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க, கரகாட்டம் கலை மூலமாக ஏற்பாடு செய்து வரவேற்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில், “அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்ததாக விளம்பரம் செய்யும் விளம்பரப்பிரியராக உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் செய்த சாதனை, அவரது தந்தைக்கு பேனா நினைவுச்சின்னம், மைதானத்திற்கு பெயர் உள்ளிட்டவை தான் சாதனை” எனப் பேசினார். மேலும் எழுதாத பேனாவிற்கு ரூ.82 கோடி தேவையா? நினைவு மண்டபம் அல்லது கட்சி அலுவலகத்தில் இரண்டு கோடியில் பேனா வையுங்கள், நடுக்கடலில் வைத்தால் தான் வைத்த மாதிரி இருக்குமா என்று கேள்வி எழுப்பினார். இரண்டு கோடிக்கு பேனா வைத்துவிட்டு, ரூ.80 கோடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதும் பேனாவை கொடுங்கள், அப்பொழுது மக்கள் பாராட்டுவார்கள் புகழ்வார்கள். மக்கள் வரிப்பணத்தை எடுத்து முதல்வரின் தந்தைக்கு நினைவு பேனாச்சின்னம் அமைக்கிறார் என்றும் விமர்சித்தார்.

Continues below advertisement



அதிமுக ஆட்சி தான் மக்களுக்கு நன்மை செய்த ஆட்சி பெருமிதம் தெரிவித்தார். மேலும், “முதியோர் உதவித்தொகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் நிறுத்திவிட்டனர். அந்த பணத்தை வைத்து முதியவர்கள் மருந்து மாத்திரையில் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எவையெல்லாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களோ அதை அனைத்தையும் பார்த்து பார்த்து தமிழக முதல்வர் முடக்கிக் கொண்டு வருகிறார். லஞ்சம் இல்லாத துறையே தமிழகத்தில் கிடையாது, ஆனால் முதல்வரை கேட்டால் அனைத்து துறைகளும் வளர்ந்து வருகிறது என்று கூறுகிறார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்னென்னவெல்லாம் நாடகம் நடத்தி வருகிறார்கள், அனைத்து அமைச்சர்களும் ஓடுகிறார்கள். செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் துடிக்கிறார்” என்றார்.


எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோனேரிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் வகித்த, அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலாளர் பதவி நெடுங்குளம் கிராமத்தில் பிறந்த எனக்கு கிடைத்துள்ளது. இந்த மண் ராசியான மண். நான்கு ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். இந்தியாவிலேயே அதிக தேசிய விருதுகளை பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்கும் அளவில் நமது ஆட்சி இருந்தது. தமிழகத்தில் தான் அதிக தார் சாலைகள் உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பாராட்டும் அளவிற்கு செயல்பட்டேன்.



தடுப்பணைகள் அதிக அளவில் கட்டி, நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்க காரணமாக இருந்தது நமது ஆட்சி. மேட்டூர் அணை அதிமுக ஆட்சியில் தூர் வாரப்பட்டது. தமிழக மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்ததன் மூலம் கடந்த ஆண்டு, 564 மாணவர்கள் மருத்துவ கல்வி கற்று வருகிறார்கள். விவசாயிகளுக்காக, பிரமாண்ட அளவில் கொண்டுவரப்பட்ட கால்நடை பூங்கா திட்டம் திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நன்மை செய்யும் வகையில் செயல்பட்ட ஒரே அரசு அதிமுக அரசு. விவசாயிகளையும், நெசவாளர்களையும் வாழ வைத்த அரசு அதிமுக அரசு. ஏழைகளுக்காக கொடுக்கப்பட்ட திட்டங்களை நிறுத்திய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். மத்திய அரசிடம் வாதாடி போராடி பெற்ற 4 வழிச்சாலை திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. திமுகவின் 2 ஆண்டுகால ஆட்சியில் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டி உள்ளனர். கடற்கரையில் எழுதாத பேனா வைக்க 80 கோடி செலவு செய்யாமல் மாணவர்களுக்கு அதே 80 கோடியில் பேனா வாங்கி கொடுக்க வேண்டும். அந்த பணம் மக்களின் வரிப்பணம். பேனா சின்னம் பத்தி பேசினால் என்மீது வழக்கு போட முதல்வர் துடிக்கிறார். என்ன வழக்கு போட்டாலும் பயப்பட மாட்டேன். ஸ்டாலின் போல வழக்குக்களை கண்டு பயப்பட மாட்டேன்” என்றார்.