தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி கோபால் தனது விவசாய நிலத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தை தனது மூன்று மகள்கள், மகன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இதில் இரண்டு மகள்கள் நிலத்தில் பங்கு வேண்டாம் என தந்தையிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் மூத்த மகள் வாசுகி மட்டும் நிலத்தில் பங்கு வேண்டும் என கேட்டுள்ளார்.
தொடர்ந்து மூத்த மகள் வாசுகிக்கு நிலம் கொடுப்பது தொடர்பாக மகன் முருகேசனிடம் கோபால் தெரிவித்துள்ளார். இதற்கு முருகேசன் நிலம் வழங்க கூடாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலத் தகராறில் தந்தை கோபால் மகன் முருகேசன் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிலத் தகராறில் ஆத்திரமடைந்த முருகேசன், தந்தை கோபாலை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவானார். இந்நிலையில் கோபால் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனை செய்து தலைமறைவான முருகேசனை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து தந்தையை கொலை செய்த முருகேசன், கோபிநாதம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரூர் தனிப்படை காவல் துறையினர் முருகேசனை பிடித்து, பென்னாகரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நல்லம்பள்ளி அருகே தந்தையை ஈட்டியால் குத்தி கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நம்ப வைத்த மகன் கைது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்து ஜருகு மந்திரிகவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (48), தறி தொழில் செய்து வருகிறார். கோவிந்தசாமிக்கு மாதம்மாள் என்ற மனைவி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகன் மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் குடிப்பழக்கம் உள்ள கோவிந்தசாமி அடிக்கடி குடித்துவிட்டு வந்து குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்த, கோவிந்தசாமி வீட்டின் அருகே உள்ள மூத்த மகன் நவீன் குமார் (28) வீட்டின் முன் நின்று கத்தியை வைத்து கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் என் அருகே யாராவது வந்தால் குத்தி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் கோபமடைந்த நவீன் குமார் அருகே இருந்த ஈட்டியை எடுத்து கோவிந்தசாமியின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். இதனால் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரங்கசாமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது தந்தை மதுபோதையில் தன்னைத் தானே குத்தி தற்கொலை செய்து கொண்டார் என நவீன்குமார் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, நவீன் குமாரை தொப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் நவின் குமார் கோபத்தில் தந்தையை ஈட்டியல் குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தந்தையை கொலை செய்த மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து குடும்ப தகராறில் மகனே தந்தையை குத்தி கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்டதாக மகன் நம்ப வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.