தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த உச்சல்வாடி ஊராட்சி கல்லடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, (45), பழனியம்மாள், (39) தம்பதிக்கு சௌமியா என்ற மகளும் தமிழ்செல்வன் என்ற மகனும் உள்ளனர். இதில் சௌமியாவுக்கு திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.இப்போது மகன் தமிழ்செல்வன் தாய், தந்தையோடு இருந்து வருகிறார். இந்நிலையில் திருநாவுக்கரசு தனியார் நிதி நிறுவன உதவியுடன் இரண்டு லாரிகள் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். முதலில் வருவாய் நன்றாக தான் இருந்திருக்கிறது. இதனால் குடும்பமும் மகிழ்ச்சியோடு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் லாரியின் ஓட்டம் குறைந்து வந்ததால், வருவாய் குறைந்துள்ளது. இதனால் நிலை தடுமாறி போன திருநாவுக்கரசு, முறையாக நிதி நிறுவனத்திற்கு தொகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. மேலும் வீட்டு செலவு, மகனின் படிப்பு செலவு என பணம் இன்றி தவித்ததாக தெரிகிறது. தொடர்ந்து பல்வேறு பகுதியில் குடும்ப செலவு உள்ளிட்டவைகளுக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்த வண்ணமாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு லாரியில் ஒரு லாரியை நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. ஆனாலும் கடன் தொல்லை நீங்காமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாகவே வீட்டில் சந்தோஷம் இல்லாமல் அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாக இருந்து வந்தது. இதனால் நேற்று இரவு கணவன் மனைவிக்கு பெரிய அளவில் சண்டை வந்தது. இந்த சண்டையின் விளைவாக மணம் உடைந்து போன திருநாவுக்கரசு கழுத்தில் சுருக்கு போட்டு தன்னுடைய விவசாய கிணற்றில் உள்ள தென்னை மரத்தில் கயிறைக்கட்டி குதித்துள்ளார். அதன் பிறகு இவரது மனைவி பழனியம்மாள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து காலையில் தாய், தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்தை கண்டு மகன் தமிழ்ச்செல்வன் கதறி அழுதுள்ளார்.
இந்த சம்பவம் தெரிந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை அடக்கம் செய்ய முடிவு செய்து, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் உறிந்த அரூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து அடக்கம் செய்ய இருந்த கணவன் மனைவி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கனவண், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.