சேலத்தில் வரதட்சணையாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட மனைவியின் வாயில் சாணி பவுடரை ஊற்றிய கணவர். மனைவி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.



சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (39), இவரது மனைவி யசோதா இருவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சந்தோஷ் குமார் புதிய தொழில் துவங்குவதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி, யசோதா குடும்பத்தாரிடம் 5 லட்சம் வரை வரதட்சணையாக பணத்தைப் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. 



இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் குடும்ப சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், இந்நிலையில் கணவருக்கு வழங்கிய ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று கூறி , கணவர் சந்தோஷ் குமார் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார் யசோதா. பணத்தை தர மறுத்த கணவர் சந்தோஷ் குமாரை கண்டித்து அவரது வீட்டின் முன் யசோதா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் யசோதா பணத்தை தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். உடனடியாக சந்தோஷ் குமார், யசோதா கையை பிடித்து வாயில் சாணி பவுடரை வாயில் ஊற்றி கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் யசோதா சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் கணவர் சந்தோஷ் குமார் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதுகுறித்து யசோதா கூறும்போது, ‛‛திருமணமாகி ஐந்து மாதங்களில் என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி அடித்து விரட்டியதாவும், கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக போராடி வருவதாகவும், காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்த நிலையில்  கணவர் சந்தோஷ் குமாருக்கு தன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்ல என்று கூறி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு தான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதாகவும், தனக்கு கணவருடன் சேர்ந்து வாழ்வதில் விருப்பம் உள்ளதால் விவாகரத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் எனது மாமியார் மற்றும் கணவர் சந்தோஷ் குமார் சேர்ந்து வீட்டை விட்டு அனுப்பி விட்டனர்,’’ என்றார்.


இந்த நிலையில் தான் தன் குடும்பத்தாரிடம் கணவர் பெற்ற ரூ.5 லட்சம் பணத்தை பெற்றுத்தருமாறு, அவரது பெற்றோர் கூறியுள்ளனர். அவர்களின் சிரமநிலை கருதி பணத்தை கேட்கச் சென்ற போது தான், இந்த சம்பவம் நடந்துள்ளது. பணத்தை தர வேண்டும் இல்லையென்றால், என்னுடம் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற கோரிக்கையை யசோதா முன்வைத்துள்ளார்.