தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்  ஏற்காடு மலைப் பகுதியில் இருந்து வரும் உபரி நீரை தேக்கி வைக்கும் வகையில், 1985 ஆம் ஆண்டு வாணியாறு நீர்த்தேக்க அணை கட்டப்பட்டது. இந்த அணையில் இடதுபுற, வலதுபுற கால்வாய்கள் மூலம், வெங்கடசமுத்திரம், மூளையானூர், மெணசி, ஆலாபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைகோட்டை, பறையப்பட்டி புதூர், அதிகாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  10,517 ஏக்கர்  விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும்  இடது புற கால்வாய் வாணியாறு அணையில் இருந்து அரூர் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை வரை 17 கிலோ மீட்டர் தூரம் விவசாய சாகுபடிக்காக செல்கிறது. இந்த கால்வாய் மேடான பகுதியில் செல்வதால் 60 கன அடி தண்ணீர் செல்லக் கூடிய கால்வாயில் 30 முதல் 40 கன அடி தண்ணீர் தான் செல்கிறது. இடது புற கால்வாயில் அணையின் முகப்பில் 15 அடி ஆழ பள்ளத்தில் உள்ளதாலும் கால்வாய் செல்ல செல்ல அதிக மேடான பகுதியாக இருப்பதாலும் தண்ணீர் செல்லும் வேகம் படிப்படியாக குறைந்து, விவசாயத்திற்கு தேவையான போதிய நீர் கிடைப்பதில்லை.

 



 

அதனால் விவசாயிகள் இந்த கால்வாயை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு படிப்படியாக கால்வாயை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தி நீர் திறந்துவிட்டால் மட்டுமே, விவசாயிகள் எதிர்பார்க்கின்ற 60 கன அடி தண்ணீரை விவசாயிகள் பெறலாம் என்ற நோக்கத்தில் அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப் பணித்துறை சார்பில் இடதுபுற, வலதுபுற கால்வாயை தூர்வாரி மறு சீரமைப்பு பணிக்காக 16 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இடது, வலது புற கால்வாய்கள் மற்றும் ஜீவா நகர், பறையப்பட்டி புதூர், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட 5 தடுப்பணைகள் சீரமைப்பு பணி முடிந்துள்ளது.

 



 

இந்நிலையில கடந்த இரண்டு மாதங்களாக பெய்து மழையால் வாணியாறு அணை நிரம்பி உபரிநீர் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஜனவரி மாதம் கால்வாய்கள் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட கால்வாய் மற்றும் தடுப்பணைகள் வழியாக தண்ணீர் கடைசி வரை செல்கிறதா? தடுப்பணைகளின்  கதவுகள் சரியாக இருக்கின்றனவா என்பது குறித்து அறிய தற்போது இடது, வலது புற கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

இதனை கடைமடை வரை சோதனை செய்து விட்டு, ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு சரி செய்ய வேண்டும் என்பதற்காக இடது வலது புற கால்வாய்கள் வழியாக வினாடிக்கு 40 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் கதவு வழியாக உபரிநீர் வினாடிக்கு 40 கனஅடி என மொத்தம் 120 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் ஓரிரு நாட்களில் நிறுத்தப்பட்டு, மீண்டும் ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.