தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது தந்தையும் சகோதரனும், வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளனர். இதனை அறிந்த அதே பகுதியைச் சார்ந்த சபரிமுத்து என்ற இளைஞர், தனது நண்பர்கள் ஸ்ரீகாந்த், திருப்பதி இருவரையும் அழைத்துச் சென்று, சிறுமி வீட்டின் முன் காவலுக்கு நிறுத்தி விட்டு, அவர் மட்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் தனியாக வீட்டில் இருந்த சிறுமி திடீரென சபரிமுத்து உள்ளே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பொழுது சபரி முத்து திடீரென சிறுமியை பிடித்துக் கீழே தள்ளியுள்ளார். இதனால் சிறுமி சத்தம் போட்டு, வீட்டை விட்டு வெளியே போ என விரட்டி உள்ளார். ஆனால் சபரிமுத்து சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்பொழுது சிறுமி சத்தமிட்டு அலறியுள்ளார். 

 

அந்த நேரத்தில் சிறுமியின் தம்பி வீட்டுக்கு வந்ததால், வெளியில் நின்ற சபரிமுத்துவும், நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பெற்றோரிடம், நடந்த சம்பவம் குறித்து சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து சிறுமியின் பெற்றோர் கடத்தூர் காவல் நிலையத்தில், சபரி முத்து மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த கடத்தூர் காவல் துறையினர் சபரிமுத்து, ஸ்ரீகாந்த், திருப்பதி ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சபரி முத்துவும் அதற்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் ஸ்ரீகாந்த் திருப்பதி ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ், கடத்தூர் காவல் துறையினர் கைது செய்து செய்தனர்.

 



 

தமிழ்நாட்டுக்கு வரும் காவிரிநீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக குறைந்தது

 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடிக்கு குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால் வட கிழக்கு பருவமழையால் தமிழக, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

 



 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை குறைந்து வருவதால், நேற்று காலை நிலவரப்படி காவிரியாற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 60,000 கன அடியிருந்தது சரிந்து, வினாடிக்கு 40,000 கன அடியாக குறைந்தது. இன்று காலை மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 30,000 கன அடியாக உள்ளது.  தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த ஒரு வாரமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, அருவிகளை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றங்கரை ஓரம் வருவாய் பேரிடர், ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 4ஆவது நாளாக நீர்வரத்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.