சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகப்படியாக சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1519 ஆக உள்ளது. மேலும் 218 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 87,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,205 ஆக உயர்வு. மாவட்டத்தில் 1970 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர்.
இன்று சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 138 மையங்களில் 15,500 கோவிஷில்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முக கவசம் அணிந்து, சமூக இடைவேளை கடைப்பிடித்து அமைதியான முறையில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 8,51,385 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லை அதனால், முதல் டோஸ் கோவாக்சின் செலுத்தி கொண்டவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். மாவட்டத்தில் நாளை தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு : தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 49 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழப்பு. மேலும் 83 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 46 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. நோயிலிருந்து குணமடைந்த 68 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 667 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 505 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.1,40,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,505 ஆக உள்ளது.