90 வது ஆண்டாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் சீறிப்பாய்ந்த தண்ணீரில் பூக்களை தூவினார் முதலமைச்சர்.
காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்கபட்டுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ம் தேதி வரை திறக்கப்படும் தண்ணீரின் வாயிலாக குறுவை சம்பா தாளடி என மூன்று போகங்களுக்கு தண்ணீர் விடுவிக்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் உரிய தேதிக்கு முன்னதாகவே மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று 8 மதகுகளை இயக்கும் பொத்தானை அமுக்கி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். முதல்கட்டமாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக இன்று இரவுக்குள் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும். டெல்டா பாசன தேவையை பொறுத்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். மேட்டூர் அணையை டெல்டா பாசனத்திற்கு திறந்து வைத்த முதல்வர் முக ஸ்டாலின் காவிரி அன்னையை மலர் தூவி வணங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, உழவர் நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12 அன்று இன்றுடன் 19 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 60 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டு கால வரலாற்றில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக கடநத ஆண்டு மட்டுமே கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 867 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 103.35 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 69.25 டி.எம்.சி ஆகவும் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.