முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு, சேலம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க மற்றும் காவிரி டெல்டா பாசலத்திற்காக மேட்டூர் அணை திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் சுற்றுப்பயணமாக சேலம் சென்றார். 


இன்று காலை (11.06.2023) சேலம் மாநகர் அண்ணா பூங்கா அருகே சேலம் மாநகராட்சி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 16 அடி உயர முழு திருவுருவ வெண்கலச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


பின்னர், அண்ணா பூங்கா அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக துறை கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.96.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு நகர பேருந்து நிலையம், வணிக வளாக கட்டிடம், பெரியார் பேரங்காடி, நேரு கலையரங்கம், வஉசி பூ மார்க்கெட் உள்ளிட்ட பல கட்டிடங்களை நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து திறந்து வைத்தார். சேலம் நகர பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நகர பேருந்து நிலையம் எனவும், நேரு கலையரங்கத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 2023 நேரு கலையரங்கம் எனவும், போஸ் மைதானத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 2023 போஸ் மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து, சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் 50,000 பயனாளிகளுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரி மற்றும் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட முடிவற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.



அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் செல்லும் வழியில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 1998 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், கோனூர் ஊராட்சியில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அச்சமத்துவபுரத்தை சீரமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் 2021-2022 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. ரூ.47 இலட்சம் செலவில் 94 வீடுகளுக்கு வெள்ளை அடித்தல் மற்றும் சிறு பழுது நீக்கப் பணிகளும், ரூ.44.20 இலட்சம் செலவில் சாலை வசதி, குடிநீர் வசதி. விளையாட்டு மைதானம். சமுதாயக்கூடம். அங்கன்வாடி மையம். நியாய விலைக்கடை, சமத்துவபுர வளைவு ஆகிய இதர பொது கட்டமைப்புகளுக்கான பழுது நீக்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனை தமிழக முதல்வர் இன்று சமத்துவபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, சமத்துவபுரத்தில் வசிக்கும் மக்களிடம் அங்குள்ள சாலை வசதி குடிநீர் வசதி போன்ற வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அம்மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதாகவும், சமத்துவபுரத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுத்தமைக்காக தங்களது நன்றியினை முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டனர்.


ஆய்வின் போது தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உடனிருந்தனர்.