ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நாராயணா இ டெக்னோ பள்ளியின் மாணவர் சேர்க்கை சேலம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கான சேர்க்கை விவரங்களை சமூக வலைதளங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக விளம்பரம் செய்யப்படுகிறது. அதற்கு உண்டான பணியில் நாராயணா இ டெக்னோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் சேலம் மாநகர் ரெட்டியூர் நகரமலை அடிவாரப் பகுதியில் பள்ளி இருப்பதாக சொல்லி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் நாராயணா கல்வி நிறுவனம் முறையான கட்டிடங்கள் எதுவும் கட்டாமல் பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகாத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி சேலம் மாநகர் சாரதா கல்லூரி சாலை, ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள நாராயணா இ டெக்னோ தற்காலிக அலுவலகத்திற்கு சென்று மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சில பெற்றோர்கள் பள்ளி குறித்து விவரங்களை கேட்டு பெறுவதோடு சிலர் கட்டிடத்தை பார்க்க ஆசையாக உள்ளது என கூறியுள்ளனர். இந்த நிலையில் ரெட்டியூர் நகர மலை அடிவாரப் பகுதியில் தற்போது தான் பள்ளி கட்டிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று இதுதான் பள்ளி பார்த்துக் கொள்ளுங்கள், அடுத்த கல்வி ஆண்டில் முழுமையாக கட்டிட பணிகள் முடிவடைந்து பள்ளி செயல்படும் என கூறி மாணவர் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சமூக வலைதளங்களில் இது தொடர்பாக செய்திகள் பரவியது. இந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) உதய குமார் சேலம் சரஸ்வதிப்பட்டி ஸ்ரீராம் நகரில் நாராயணா இ டெக்னோ என்ற பெயரில் தொடங்கவிருக்கும் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி ஏதும் இதுவரை பெறப்படவில்லை. எனவே அனுமதி பெறாமல் செயல்படும் இப்பள்ளியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே தங்களது குழந்தைகளை நாராயணா இ டெக்னோ பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர். அனுமதியே பெறாமல் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டதும் வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டது என அடுத்தடுத்த புகாரில் சிக்கும் நாராயண பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்