தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த  பாலஜங்கமனஹள்ளி பகுதியை சேர்ந்த செங்கல் சூளை அதிபர் புஷ்பராஜ்(56) மற்றும் அவருடைய மனைவி வள்ளியம்மாள் (45) இருவரும் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் ஒரு  திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டு, வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர். அப்பொழுது தருமபுரி நகரை ஒட்டியுள்ள ராமாக்கள் ஏரி அருகே,  அரூர் செல்லும் பிரிவு சாலை அருகே வந்துள்ளனர்.

 



 

அப்பொழுது பின்னல் அதி வேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில்  டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய புஷ்பராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும் அவருடைய மனைவி வள்ளியம்மாள் டிப்பர் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி, சுமார் இருபது அடி தூரம் வரை இழுத்துச் சென்றதில் தலை நசுங்கி உயிரிழந்தார்.  இந்த கோர விபத்து சம்பவத்துக்கு டிப்பர் லாரி ஓட்டுநர் அதிவேகமாக வந்ததே காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர், தப்பி ஓடிவிட்டார்.

 



 

மேலும் கணவன் மனைவி இருவரின் சடலங்களை கைப்பற்றிய மதிகோன்பாளையம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய ஓட்டுனரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தருமபுரி-கிருஸ்ணகிரி பிரதான சாலையில், டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்து சம்பவத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி அருகே விபத்தில் கணவன் மனைவி விபத்தில் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.