தேர்தல் நேரத்தில் எறும்புகள், தேனீக்களை போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு நமது வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்க வேண்டும், இந்தப் பணியை சரியான முறையில் செயல்படுத்தினால், நம் வேட்பாளரை எதிர்த்து நிற்கும் எந்த வேட்பாளராலும் வெற்றி பெற முடியாது என்றும் உழைப்புதான் வெற்றி தரும், அந்த உழைப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் போது அதிமுக வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெறமுடியும். தமிழகத்தில் அலங்கோல ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்கு நிம்மதி இல்லாத ஆட்சி. ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பாக அழகாக பேசினார். 523 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்கள். தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு 95 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக, முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று பேசி வருகிறார். திமுக தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம் கூட நிறைவேற்ற முடியாத ஆட்சியாக திமுக ஆட்சி செயல்படுகிறார்கள். தேர்தல் நேரத்தில் அழகாக, கவர்ச்சியாக பேசுவார்கள். அவை அனைத்தும் முறியடித்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக உழைக்க வேண்டும் அதிமுக தான். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை கொடுத்தார். மக்களை போற்றும் அளவிற்கு எதிரிகள் கூட, மூக்கின் மீது விரல் வைத்து பாராட்டுக்கூடிய அளவிற்கு சிறப்பான ஆட்சியை அதிமுக அரசாங்கம் கொடுத்துள்ளது. தமிழகத்தில் திமுகவிற்கு மக்கள் தவறுதலாக வாக்களித்து துன்பத்தில் சிரமப்பட்டு வருகிறோம் என்று பேசும் அளவிற்கு தான், எங்கு பார்த்தாலும் பிரதிபலித்து வருகிறது. கடந்தகால அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்தது என்று மக்கள் பேசுகிறார்கள்.
அதிமுகவை பொருத்தவரை எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி, தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சிமேலும் தமிழக மக்கள் மீது பெரும் சுமையை சுமத்திய ஆட்சி திமுக ஆட்சி மின்கட்டணம், வீட்டுவரி உள்ளிட்டவைகள் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களால் தாங்க முடியாத அளவிற்கு பாரத்தை ஏற்றிய கட்சி திமுக கட்சி தான். பிங்க் கலர் உள்ள பேருந்துகள் மட்டும்தான் மகளிர் பயணிக்க முடியும். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்திருந்தனர். எப்படியெல்லாம் திமுக ஏமாற்றுவதில் ஈடுபடுகிறார்கள். அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்து, பின்னர் தகுதியான மகளிருக்கு மட்டும் தான் என்று அறிவித்தார்கள், மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. கார் வைத்திருப்பவர்கள், 10 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் பணம் கொடுத்துள்ளார்கள். ஏழை மக்களுக்கு பலருக்கு கிடைக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டு இருந்தார்கள், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவைகள் அதிகம் நடைபெறுகிறது. முதியோர்களை குறி வைத்து கொலை செய்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் போதைப் பொருட்களால் சீரழிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் கஞ்சா சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.காரணம் திறமையற்ற அரசாங்கம், பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது இதனால் கட்டுப்படுத்த தவறி அரசாங்கம் தான் திமுக அரசாங்கம்" என்று குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக எதற்கும் அஞ்சாமல் நிற்கின்ற கட்சி அதிமுக தான். அதிமுக ஆட்சி நிறைய போராட்டங்கள் நடைபெற்றது.அந்த அளவிற்கு நேர்மையாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் போராட்டத்தை கண்டால் தமிழக முதல்வர் அஞ்சுகிறார். மக்களின் குறைகளை போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மூலம்தான் கொண்டு செல்லமுடியும், அதை தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் கூறினார். கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, திமுக விட்டு சென்ற கடன் 1.34 லட்சம் கோடி. ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை திமுக வாங்கிய கடனுக்கு ஒரு லட்சம் கோடி அதிமுக கட்டியுள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்து விலகும்போது 2021ஆம் ஆண்டு 4.15 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால் தற்பொழுது நடைபெறும் திமுகவின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 2.73 லட்சம் கோடி கடன் பெற்றுவிட்டனர். இந்தியாவிலேயே கடந்த ஒரு ஆண்டில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான், கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.இப்படிப் பார்க்கும்போது 4.15 லட்சம் கோடியில்,2.01 லட்சம் கோடி மட்டும் தான் அதிமுக ஆட்சியில் கடன் மீதமுள்ள 2.14 லட்சம் கோடி திமுக வாங்கிய கடன் எனவும் கூறினார்.
இதில் 20 ஆயிரம் கோடி மின்சாரத் துறைக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கொரோனா காலத்தில் எந்த துறைகளிலும் வருமானம் இல்லை... இதனால் 60 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது மேலும் 40 ஆயிரம் கோடி கொரோனாவிற்கு செலவு செய்யப்பட்டது. அப்படி பார்க்கும்போது அதிமுகவின் பத்து ஆண்டுகால ஆட்சியில் 81 ஆயிரம் கோடி மட்டுமே கடன் வாங்கப்பட்டது இந்த பணத்தின் மூலமாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் புள்ளி விவரமாக தெரிவித்தார்.
தமிழக முதல்வர் 30 ஆயிரம் கோடியை பாதுகாக்கத்தான் இந்தியா கூட்டணியில் சேர்ந்து துடித்து கொண்டிருக்கிறார். கொள்ளை அடித்த பணத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும், அப்போது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தால், இந்த பிரச்சினை தீரும் என எண்ணிதான் திமுக வெற்றி பெறும் என சொல்லாமல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.ஸ்டாலினுக்கு தன் கட்சி மீது நம்பிக்கை இல்லை இந்தியா கூட்டணி மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாதமான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம் என்று அறிவிக்கப்பட்டது. தொண்டர்களின் உணர்வை தலைமை கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உணர்வுகளின் அடிப்படையில் அதிமுக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாஜகவின் கூட்டணியில் இருந்து அதிமுக விலகி கொள்கிறது என்ற முடிவை எடுத்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு பொதுச்செயலாளர் என்று அடிப்படையில் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த அதிமுகவின் தொண்டர்களின் முடிவு. அனைவரின் முடிவின் அடிப்படையில் தான் இந்த தீர்வு எடுக்கப்பட்டது. அதிமுக வலிமை வாய்ந்த கட்சி இரண்டு கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக. இரண்டு கோடி உறுப்பினர்களின் எண்ணத்தையின் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்பட்டது என்றும் பாஜக கூட்டணி முடிவு குறித்து மனம் திறந்து பேசினார்.
தமிழகம் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதியிலும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றியை பெறுவார்கள்.இந்த பூத் கமிட்டி கூட்டம் தமிழக முழுவதும் பிரதிபலிக்க வேண்டும். அதிமுக பலமாய்ந்த கட்சி வலிமை வாய்ந்த கட்சி என்றும் கூறினார். ஒரு கட்சியின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அனைவரின் சம்மதத்துடன் தான் நிறைவேற்றப்பட்டது என்று எண்ணி கொள்ளவேண்டும் அதுதான் இறுதி முடிவு. அதிமுகவில் அனைவரின் ஆலோசனையின் முடிவில் தான் கூட்டணி விலகல் என்பதை தெரிவிக்கிறேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அதிமுக என்பது மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கம் என்றார். அதிமுக தமிழக மக்களின் உரிமைக்காக மக்களை சந்தித்து வேட்பாளரை வெற்றிபெற வாக்குகளை சேகரிப்போம் என்றும் அறிவுறுத்தல் வழங்கினார். சில நேரங்களில் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம், தேசிய கட்சி, தேசியளவில் முடிவெடுத்து, நமக்கு உடன்படாத பிரச்சனைகளுக்கு, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். அந்த நிலையை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன் என்று வெளிப்படையாக பேசினார். அதிமுகவை பொறுத்தவரை தமிழக மக்கள் தான் எஜமானர்கள், முதலாளிகள் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவது தான்..எங்களது தலையாய கடமை. தமிழக மக்களின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் தமிழகத்திற்கு தேவையான நிதிகள், திட்டங்களை பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்போம் என்றும் கூறினார். சிறுபான்மை மக்களுக்கு முதல் குரல் கொடுப்பது அதிமுக தான் என்பது சுட்டிக்காட்ட விரும்புகிறேன், 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.. அதிமுக மாநிலகட்சி, தேசிய கட்சி அல்ல எனவும், மாநில மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து செயல்படுகிறோம், மாநிலங்களில் மக்களின் நலம் தான் முக்கியம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் முதல் ஆளாக எதிர்ப்பது அதிமுக தான் இருக்கும். தமிழக மக்களுக்கு நன்மையான திட்டங்கள் கொண்டு வந்தால் வரவேற்போம் என்றும் உறுதிப்பட பேசினார்.