தருமபுரியில் தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன். குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் விடுதலையில் கவர்னரை உச்சநீதிமன்றம் வன்மையாக கண்டித்துள்ளது.  ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கு கட்டுப்பட்டவர், மாநில அரசின் சட்டப்பேரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடியவர். ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்படுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.  ஆளுநருக்கு அதிகாரம், அரசியல் சட்டத்தில் எங்கு உள்ளது என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இது ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் வரம்பு மீறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. 

 



 

நீட் தேர்வு விவகாரத்திலும், பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ரவி அவருடைய அதிகார வரம்பை மீறி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு உள்ளாகி உள்ள ஆளுநர் ரவியை, மோடி அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.  நீட் தேர்வு விவகாரத்தில் ஏழு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல், காலதாமதம் செய்வது அவரது அதிகார வரம்பு மீறுவதை காட்டுகிறது. அதேபோல் அண்மையில் மாநில அரசுக்கு, முதலமைச்சருக்கு, உயர் கல்வித்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தாமல், அழைப்பு விடுக்காமல் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தன்னிச்சையாக நடத்தியிருக்கிறார். இது ஆளுநர் ஒரு தனி அரசாங்கத்தை நடத்த முயல்கிறார். இரட்டிப்பு அதிகாரம் என்பது ஒரு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.

 

மேலும் நாட்டிலுள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் உள்பட பலர் நீதிமன்றங்களில் கண்டிப்புக்கு உள்ளாகி வருகின்ற, நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியுள்ளார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவது,  தன்னுடைய அதிகாரத்தை மீறி செயல்படுவது, மாநில அரசுக்கு இணையாக போட்டியாக ஒரு அரசை நடத்த முயல்வது என்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துவிடும். இது தமிழ்நாட்டு மக்களுக்கு உகந்தது அல்ல. எனவே உடனடியாக தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

 



 

மேலும் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஒரு பார்வையும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு பார்வையும் செலுத்துவது, இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் ஏற்றதல்ல. இது  தமிழ்நாட்டுக்கு செய்யக் கூடிய துரோகம். இதனை தமிழ்நாட்டு மக்கள் ஒருக்காலும் மன்னிக்க மாட்டார்கள். ஆளுநரை வைத்துக் கொண்டு புறவழி வழியாக பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் காலூன்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறது. இந்த கணக்கு  பெரியார் மண்ணில் ஒரு காலும் எடுபடாது. இதை கவனத்தில் கொண்டு மோடியும், பாஜகவை   சேர்ந்தவர்களும் செயல்பட வேண்டும். மண்ணிற்கு ஏற்ற விதை விதைக்க வேண்டும் என பொன்.குமார் தெரிவித்தார்.