ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ளது. கடந்த இரண்டு வருடமாக கொரோனா நோய் தொற்று காரணமாக ஆயுத பூஜை கொண்டாடப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு தொற்று குறைந்துள்ளதால் ஆயுத பூஜை வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


ஆயுத பூஜை பண்டிகைக்காக சேலம் சின்ன கடை வீதி மற்றும் செவ்வாய்பேட்டை, சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருக்கும் மண்டிகளுக்கு சாம்பல் பூசணி அதிக அளவு வரவழைக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலத்திலிருந்து லாரி லாரியாக ஆக சாம்பல் பூசணியை வியாபாரிகள் வரவழைத்து உள்ளனர்.


ஆந்திராவைத் தவிர அரியலூர், அரூர், கரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் சாம்பல் பூசணி வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஒரு கிலோ சாம்பல் பூசணி ரூபாய் 20க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கிலோ ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரத்து அதிகரித்து இருந்தாலும், விலை சற்று அதிகரித்துள்ளதாகவும், ஆயுத பூஜை பண்டிகைக்காக சுமார் 100 டன் சாம்பல் பூசணி வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் சேலம் வியாபாரிகள் தெரிவித்தனர்.



இதேபோன்று, ஆயுத பூஜையையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. பண்டிகை காலம் என்பதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஆயுத பூஜை, விஜய தசமியை கொண்டாட சேலத்தில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்று பலரும் தங்கள் வீடுகள், கடைகளை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். பெரும்பாலானோர் பூஜைக்குத் தேவையான பூக்களை இன்றே வாங்கிச்செல்ல சேலம் பூ மார்க்கெட்டில் குவிந்நதால் கூட்டம் அலைமோதியது. பண்டிகைக்காலம் என்பதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. குண்டுமல்லி நேற்று ஒரு கிலோ 800 ரூபாயக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முல்லை 600 முதல் 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 



நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொரி, பழங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு பொரி மற்றும் பழங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டாலும், விலை கடந்த ஆண்டு விட அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் குறைந்த அளவு பொருட்களை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர் என வியாபாரிகள் கூறுகின்றனர். பழங்களைப் பொறுத்தவரை ஆப்பிள் ஒரு கிலோ 80 முதல் 150 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி கிலோ 70 ரூபாய்க்கும், கொய்யா ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், திராட்சை ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வாழைக் கன்றுகள் ஜோடி 100 ரூபாய் வரை விற்கப்படுவதால் அதன் விற்பனை சற்று குறைந்தே காணப்படுகிறது. பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளை ஜிகினா பேப்பர் என்று சொல்லக்கூடிய வண்ண பேப்பர்களை கொண்டு அலங்காரம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகம் உள்ளதால் வசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.