சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் "என் மண் என் மக்கள்" யாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் ஓமலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "ஓமலூர் சரித்திர பாரம்பரியமிக்க பகுதியாக உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோவில் கட்டுமானப் பணிகளுக்கு நிதி வழங்கியதில் இந்திய அளவில் 3வது பெரிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால் இங்குதான் சனாதனத்தை வேரறுப்போம் என சில தலைவர்கள் சொல்கிறார்கள். ராமனுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் என பேசுகிறார்கள். ஆனால், ராமனுக்கும் ஓமலூருக்கும் என்ன சம்பந்தம் என அறிந்து கொள்ளும் நிலை உருவாகி விட்டது. இதே பகுதியில் சரபங்கா முனிவர் நான்கு காலத்திலும் ஓமத் தீ ஒன்றை நடத்தினார். ஸ்ரீராமர் பாதம் பட்ட ஓமலூரில், ஸ்ரீ ராமர் வைகுண்டம் செல்வதற்காக இந்த ஹோமம் நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள். சனாதன தர்மத்தின் பெயரை மீட்டெடுக்கும் விதமாக அயோத்தி ராமன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஓமலூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையாக பல கோவில்கள் உள்ளன. உள்ளூர்காரர்களுக்கு நான் சொல்வது புதிதாக இருக்காது. ஆனால் யாத்திரை செய்திகள் உலகம் முழுவதும் செல்வதால் ஒவ்வொரு ஊரிலும், அந்த ஊரின் பெருமையை சொல்லி வருகிறேன்.


 


ஜாதி அரசியலை அறிமுகப்படுத்தி, இன்றைக்கும் அந்த அரசியல் இருக்க திமுகதான் காரணம். போலி வாக்குறுதி அளித்துள்ள திமுகவை வேரோடு எடுப்பதற்காக யாத்திரை நடத்தி வருகிறோம். வரும் பாராளுமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். 2014-ல் இந்தியா என்றால் ஊழல் என்று சொன்னார்கள். 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், அலைக்கற்றை, காமன்வெல்த் விளையாட்டு என 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது. ஆனால் கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு குண்டூசி கூட திருட்டு போகவில்லை என மக்கள் சொல்கிறார்கள். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வருவார் என்பது உறுதியாகி விட்டது. இந்தியா முழுவதும் அனைத்து மக்களும் முடிவு செய்து விட்டார்கள். தமிழகம் தான் கடைசி இடத்தில் உள்ளது. நாம்தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது. 9 மாநிலங்கள் 100 சதவீதம் அளவிற்கு அனைத்து எம்.பிக்களையும் பிரதமர் மோடிக்காக கொடுக்கிறார்கள். இந்த முறை 39 தொகுதிகளிலும் பாஜக எம்பிக்களை அளித்த பெருமையை அடைய வேண்டும். திமுக ஆட்சி, பாஜக ஆட்சி ஒரு தராசு தட்டில் வைத்து பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. செந்தில்பாலாஜி சிறையில் உள்ளார். அமைச்சர் பொன்முடி இன்னும் 22 நாட்களில் சிறை செல்ல உள்ளார். அடுத்து, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு. மறுபடியும் பொன்முடி மற்றொரு வழக்கில் நீதிமன்றத்தில் கிடைக்கும் நியாயமான தீர்ப்பில் தண்டிக்கப்படுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.


 


தமிழ்நாட்டில் 120 எம்.பி. எம்.எல்.ஏ அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கிறது. அவர்கள் எல்லோரையும் அனுப்பி விட்டால் தமிழ்நாட்டில் ஊழல் என்ற சொல்லே இருக்காது. யாரும் ஏழையாக இருக்க மாட்டார்கள். ஆட்சியாளர்கள் சரியாக இல்லாமல், கொள்ளையடிப்பதால் மக்கள் ஏழைகளாக உள்ளனர். திமுக தேர்தலின் போது சொன்ன வாக்குறுதியில் 20 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.   தமிழக அரசியல்வாதிகள் நேசிப்பதை விட, பிரதமர் மோடி தமிழர்களையும், தமிழ் பாரம்பரியத்தையும் அதிகளவில் நேசிக்கிறார். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழின் பெருமையை பேசுவதில் பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர்கள் இல்லை. திருக்குறளை 49 மொழிகளில் மொழி பெயர்த்து வழங்கியுள்ளார்.


தமிழகத்தின் கடன் 6 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 31 மாதத்தில் மட்டும் திமுக அரசு 2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இந்தக் கடனை கட்ட 87 வருடமாகும். கடனை வாங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி. இலவசங்களை வழங்கி ஆட்சிக்கு வந்து ஊழல் செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதை முறியடிப்பதற்க்கான வாய்ப்பாக பாராளுமன்றத் தேர்தலை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் தைரியமாக முடிவெடுக்க தனிப்பெரும்பான்மையே காரணம். இதுவே 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தால் 2 லட்சத்து 50 ஆயீரம் கோடி செலவு செய்து நதி நீர் இணைப்பை செய்து விடலாம். காவிரி-கோதாவரி இணைக்கப்படும் போது நீர் பிரச்சினைகள் தீரும். தொலை நோக்கு பார்வை கொண்ட பாரதிய ஜனதாக் கட்சிக்கு பொதுமக்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்" என்று பேசினார்.