சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.  ஆத்தூர் நகரின் முக்கிய வீதிகள் பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடையே  கலந்துரையாடினார்.


பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், "தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தின் பாரம்பரியமும் சரித்திரமும் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது. திமுக இளைஞர் அணி மாநாடு இயற்கைக்கே பிடிக்கவில்லை. பல முறை தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. திமுக இளைஞர் எழுச்சி மாநாடு என்கிறார்கள். பணம் கொடுக்காமல் மாநாட்டிற்கு ஆட்கள் வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். இளைஞர்கள் எல்லாம் பாரதிய ஜனதா கட்சி பக்கம் வந்து விட்டார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி பல்வேறு தரப்பினர் வந்துள்ளனர். தமிழகத்தில் மாற்றத்தை கொடுக்கக்கூடிய யாத்திரையாக அமைந்துள்ளது.


இந்திய அரசியல் மாற்றத்தின் பக்கம் இருப்பதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணர்ந்துள்ளனர். தமிழகத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கக்கூடிய தொகுதியாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தொகுதிக்குள் வராத எம்.பி.யாக கள்ளக்குறிச்சி திமுக எம்.பி உள்ளார். ஏற்கனவே அமைச்சர் பொன்முடி ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்து இன்னும் ஒரு மாதத்தில் சிறை சென்று விடுவார். 2-வது வழக்கில் தீர்ப்பு வந்தால், அவருடன் அவருடைய மகன் சிறை செல்லும் நிலை உருவாகும். இதனால் பதவியும் பறிபோய்விடும். மக்களுக்கு சேவை செய்யாத எம்.பியால் என்ன பயன் இருக்கிறது.


எந்த தகுதியும் இல்லாமல், அமைச்சரின் மகன் என்கிற ஒரு தகுதியால் மட்டுமே அவர் உள்ளார். எதிர்காலத்தில் மக்களுக்கு சேவை செய்பவரை 2024 பாராளுமன்றத் தேர்தலில் எம்.பியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.


 


உலகம் போற்றும் உத்தமராக பிரதமர் செயல்பட்டு வருகிறார். உலகில் பிடித்த தலைவர்களில் 76 சதவீதம் பேருக்கு பிடித்த தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பிற நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டும் அளவிற்கு அவரின் பணிகள் உள்ளன. உலக பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என அனைத்து நாடுகளும் எதிர்பார்க்கின்றன.


உக்ரைன் பிரச்சினையில் 6 மணி நேரம் போரை நிறுத்திவிட்டு இந்தியாவைச் சேர்ந்த 22 ஆயிரம் மாணவர்களை மீட்டு வெளியில் கொண்டு வந்த பெருமைக்குரியவர் பிரதமர் மோடி. உலக நாடுகள் பார்த்து வியந்து போய்விட்ட நிலை ஏற்பட்டது. இந்தியாவின் முடிவு என்ன என்பதிற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன.


2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அனைவரும் மோடிக்கு ஆதரவளித்தபோது, தமிழகத்தில் பொய்களை சொல்லி மக்களை திமுக திசை திருப்பிவிட்டது. ஆனால் இந்தமுறை திமுகவின் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள். திமுக பொங்கல் தொகுப்பிற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் ஒரு கையில் கொடுத்தாலும் மற்றொரு கையில் பறித்துச் செல்லும் அளவிற்கு மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு என அனைத்தும் உயர்ந்து விட்டது. வருடத்திற்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் எந்தவித விளம்பரமும் இன்றி பிரதமர் மோடி வங்கிக் கணக்கில் செலுத்தி விடுகிறார். இதில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் எந்தவித தலையீடும் செய்வதில்லை. சத்தமே இல்லாமல் மெளன புரட்சி போல மக்களுக்கு பயன்கள் கிடைக்கிறது. இது மக்களின் உரிமையாகும். திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, அதை திமுக நிர்வாகிகள் விமர்சனமும் செய்கின்றனர். தாய்மார்களை ஓசி என்று கிண்டலடித்த அமைச்சர் பொன்முடியை, தாய்மார்களின் சாபம் சிறைக்கு அனுப்பி விட்டது என்றார்.



வழக்கமாக ஒன்றியப் பிரதமர் என்று சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது பாரத பிரதமர் என்கிறார். தமிழகத்திற்கு எதுவும் சரியாக கிடைக்காது என்று முதலமைச்சர் பொய் சொல்கிறார். ஆனால் மேடையில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது இரண்டரை மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத நிலையில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.


தமிழ் கலாசாரத்தினை உலகம் முழுக்க பிரதமர் மோடி கொண்டு செல்கிறார். தமிழ் கலாச்சாரத்தை தூக்கி பிடித்து வருகிறார். தமிழகத்தில் இந்தியை திணிக்கிறார் என திமுகவினர் யாரும் சொல்ல முடியாது. பிரதமர் மோடி தமிழை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கிறார் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.  திமுக அமைச்சர்கள் வந்தால் அவர்களை 10 திருக்குறளை சொல்லுங்கள் என்று சொல்ல வேண்டும். ஆனால் அவர்களால் பிழையின்றி சொல்ல முடியாது. தமிழ்மொழியை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். திமுக சொல்லும் எந்த பொய்க்கும் செவி சாய்க்காமல் 2024 ஆம் ஆண்டு தேர்தல் இந்தியா வல்லரசு நாடாக ஆவதற்கான தேர்தல் என்பதால் பொதுமக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்று பேசினார்.