Annamalai On DMK : சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக அளவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 61 அதிகாரிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். 


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சமூகத்தின் பாதுகாப்பிற்காக மிக நேர்மையான முறையில் செயல்பட்ட காவல்துறையினர் ஓய்வு பெற்ற பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது பொதுமக்களிடையே மிகுந்த எழுச்சியை உருவாக்கி அவர்களும் கட்சியில் சேர வழிவகுக்கும். கட்சியில் இணைந்துள்ள முன்னாள் காவல்துறையினர், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு தங்களது பகுதிகளில் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். தற்போது முன்னாள் ராணுவத்தினருக்கான பிரிவு தற்போது பாரதிய ஜனதாக் கட்சியில் உள்ளது. இதைப் போல காவல்துறையினருக்கான பிரிவை கட்சித் தலைமையின் அனுமதி பெற்று தொடங்கப்படும். காவல்துறையில் பணியாற்றிய என்னைப் போல நீங்களும் கட்சியில் இணைந்துள்ளீர்கள். காவல்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலை, வாரத்திற்கு இருநாள் விடுமுறை மற்றும் மன அழுத்தம் இல்லா பணி வாய்ப்பு உருவாக்கப்படும்" என்று பேசினார்.


 


இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ. 1,000 வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நிதிநிலையை காரணமாக காட்டியுள்ளது. இதே முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இப்போது ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். இதற்கு நிதி நிலை சீராக இல்லை என்று காரணம் சொல்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 31 மாதங்களில் மட்டும் திமுக அரசு 2.69 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை இதனால் 8.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 40 சதவீத தொகை திமுக ஆட்சியில் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதார நிலைய மேம்படுத்த திமுக அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல் வெறுமனே பஞ்சப்பாட்டு பாடுவதே திமுகவினரின் செயலாக உள்ளது. தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. இதனால் தமிழகத்தின் நிதி நிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.இதே வேகத்தில் சென்றால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 வருடங்களில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விடும். இந்திய அளவில் மிகக் குறைவான அன்னிய முதலீடு தமிழகத்திற்குத்தான வந்துள்ளது. முதலமைச்சர் துபாய்க்கு சென்று வந்த பிறகு 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடே இன்னும் வரவில்லை. இதில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 5 லட்சம் கோடி ருபாய் முதலீடு வரும் என்பதை ஏற்க முடியாது.


 


சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்னை விசாரணைக்கு அழைத்தால் சந்திக்கத் தயார். இன்னும் பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் இது தொடர்பாக வம்பிழுக்கு தயாராக உள்ளது. அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய கவனத்திற்கு வரும் அனைத்து முறைகேடுகளையும் மக்கள் முன்பு வைப்பதே என் வேலை. ஏற்கனவே, கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின்போது, அது தீவிரவாத செயல் என்பதற்கான ஆவணத்தை நான் வெளியிட்டேன். தவறை வெளிப்படுத்துவதற்காக திமுக அரசு நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்கத் தயாராக உள்ளேன். பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மத்திய குழு கூடி முடிவெடுத்து அறிவிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று யார் வந்தாலும் இருகரம் கூப்பி நான் வரவேற்பேன். சேலம் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்று கூறினார்.