பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி பல இடங்களில் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையில் கலப்படம் செய்து தயாரிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் கலப்படம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சேலம் மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்ணன், குமரகுருபரன், ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சங்ககிரி அடுத்துள்ள தேவூர் அஞ்சல், சோலக்கவுண்டனூர் பகுதியில் அமைந்திருந்த குடோனில் தீடிர் சோதனை நடத்தினர். 



சோதனையில் நாட்டுச் சர்க்கரை தயாரிப்பில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 6 டன் வெள்ளை சர்க்கரை மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் இரண்டு இலட்சம் ஆகும். சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி மற்றும் இடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள 7 கரும்பாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் இடப்பாடி மெயின் ரோடு, கன்னந்தேரி பகுதியில் அமைந்திருந்த சின்னமுத்து கரும்பாலையில் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரையில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 34 மூட்டைகளும், மயிலாண்டி வலவு, சமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள சின்ன பையன் கரும்பாலையில் 14 மூட்டைகளும் மொத்தமாக 2,400 கிலோ கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதுவரை சேலம் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் மொத்தம் 45,250 கிலோ கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளைச் சர்க்கரை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 130 ஆலைகளில் இதுவரை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீதி உள்ள ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.



இதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் ஓமலூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்பொழுது ஏழுமலை, தங்கதுரை, கிருஷ்ணன், குணசேகரன் ஆகிய நான்கு பேர் நடத்தி வந்த கரும்பாலையில் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 4.31 லட்சம் மதிப்பிலான 12,700 கிலோ சர்க்கரை மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் ஒரு ஆலையில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட 500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 30 ஆயிரம் ரூபாய் ஆகும். இவையிலிருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக சர்க்கரை, ஹைட்ரோஸ், ப்ளீச்சிங் பவுடர், சூப்பர்பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு பாதுகாப்பு சட்டம் 2006 ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேபோல் கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டில் வெள்ளை சர்க்கரை 22,325 கிலோ, ஜாங்கிரி 61,086 கிலோ, மைதா 190 கிலோ, செயற்கை நிறமூட்டிகள் 400 கிலோ, ஹைட்ரோஸ் 5 கிலோ மற்றும் சோடியம் பீ கார்பனேட் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 2020 - 2021 ஆம் ஆண்டில் வெள்ளை சர்க்கரை 600 கிலோ, ஜாங்கிரி 2,100 கிலோ, சோடியம் பீ கார்பனேட் 25 கிலோ மற்றும் சோடா 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு பின்பு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.