சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தாயாக இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களுக்கு விவசாயம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி மேட்டூர் அணை மற்றும் மேட்டூர் அணைக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் மேட்டூர் அணைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பொதுவாக அணை நிரம்பினால் எட்டுக்கண் மதகுகள், அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் அல்லது 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும். குறிப்பாக டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் எட்டுக் கண் மதகுகள் வழியாக திறக்கப்படும். இதேபோன்று அணை மின் நிலையம் மற்றும் சுரங்கம் மின் நிலையங்களில் பயன்படுத்திய தண்ணீர் மீண்டும் காவிரி ஆற்றில் கலந்துவிடும்.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் செல்லும் காவிரி ஆற்றின் பாலத்தின் அருகே உள்ள படித்துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி சுற்றுலா வரும் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் காவிரி ஆற்றில் நீராடி செல்வது வழக்கம். இந்தப் படித்துறையில் சமீப நாட்களாக இறந்தவர்களுக்கு செலுத்தப்படும் சடங்குகள் செய்யும் இடமாக மாறி உள்ளது. இங்கு செய்யப்படும் சடங்குகள் முடித்த பின் காவிரி ஆற்றல் நீராடும் பொதுமக்களின் உடைகள் மற்றும் பூஜை கழிவுகளை அங்கேயே வீட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத சிலர் அங்கு மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். சிலர் காலை வரை இங்கேயே படுத்து உறங்குகின்றனர். அவர்களால் இங்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது.
எனவே மேட்டூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக காவிரி பாலத்தின் படித்துறையில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி, அங்கு நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி ஒன்றை வைக்க வேண்டும் என்றும், குப்பைகளை படித்துறையில் போடும்போது மக்களை கண்காணித்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இரவு நேரங்களில் படித்துறையில் அமர்ந்து மது அருந்துபவர்களை கண்டறிந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பான செய்தி கடந்த நவம்பர் மாதம் ஏபிபி வெளியிட்டதை பார்த்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதியான கோனூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவிரி ஆற்றில் பல பகுதிகளில் நீர் மாசு அடைந்து வருவது குறித்து அதிகாரிகளிடம் கூறி உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி மேட்டூர் நகராட்சி பணியாளர்கள் காவேரி ஆற்றின் ஒட்டி உள்ள பகுதிகளில் சுத்தம் செய்தனர். மேலும் இரண்டு வாரத்திற்குள்ளாக மேட்டூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து புகார் அளிப்போம் என எச்சரிக்கை விடுத்தார்.