பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூர் அடுத்த வார சந்தையில் கால்நடைகள் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. ஆடுகள் ரூ. 2 கோடிக்கும், மாடுகள் ஒன்றரை கோடக்கு என மொத்தம் நான்கு கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

 

தருமபுரி மாவட்டம் அரூர் எடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் கால்நடை சந்தைகள் நடைபெறுகிறது. இந்த வார சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும், கால்நடைகளை வாங்குவதற்கும், விற்கவும் வருகின்றனர். இந்த வார சந்தையில் வாரந்தோறும் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும். மேலும் தீபாவளி, பொங்கல், ஆடி, ரமலான், கிருஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் 3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.



 

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வந்ததால், கடந்த சில வாரங்களாக கால்நடைகள் வரத்து குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், இறைச்சிக்காக கால்நடைகளை வாங்க இன்றைய வார சந்தைக்கு ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். இதனால் இன்றைய வார சந்தையில் 1500 க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் 10 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மாடுகள் விலை அதிகரித்து விற்பனையானது. மேலும் கெமங்கலம் நாட்டு இன மாடுகள் அதிகப்படியாக வார சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இன்றைய சந்தையில் 1500 க்கு மேற்பட்ட மாடுகள் சுமார் ரூ.1.50 கோடிக்கு விற்பனையானது.

 

இதேபோல் 2500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் ஆடுகள் சுமார் 10,000 முதல் 35,000 வரை விற்பனையானது. இன்றைய வார சந்தையில் ஆடுகள் மட்டும் ரூ.2 கோடி அளவிற்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகை வருவதால் இறைச்சி பிரியர்கள் அதிக அளவில் வார சந்தைக்கு வந்திருந்தால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் ரூ.3.50 கோடிக்கு விற்பனையானது. இன்றைய சந்தையில் மொத்தம் சுமார் 4 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை நாட்களில் சுமார் ஐந்து கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், தொடர் மழையால் கால்நடைகள் வரத்து என்பது கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு குறைவாகவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.