மகிழ்ச்சியாக நடக்கும் இறுதி ஊர்வலம்... சேலத்தில் வினோத நேர்த்திக்கடன்

மக்கள் உடல் நலத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதற்காக சவ வேடிக்கை திருவிழா.

Continues below advertisement

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று இறுதிச்சடங்கு நடத்தும் வினோத கோவில் திருவிழா சேலத்தில் நடைபெறுகிறது . சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பலபட்டரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதம் நடத்தப்படும் முக்கிய நிகழ்வான கிராம மக்கள் உடல் நலத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதற்காக சவ வேடிக்கை திருவிழா நடத்துவது வழக்கம். இது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

சவ வேடிக்கை என்றால் ஒரு மனிதன் இறந்தவுடன் முதல் சடங்குகளில் துவங்கி இடுகாடு வரைக்கும் கொண்டு சென்று இறுதி சடங்கு நடத்தும் முறை அனைத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே சவ வேடிக்கை வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டிருந்த நபர் இறந்துவிட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக வேறு யாரும் முன் வரவில்லை என்பதால் நடைபெறாமல் இருந்துள்ளது. இதையடுத்து, சேலம் கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். பின்னர் கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை மாரியம்மன் கோயிலுக்கு சென்ற ஜெயமணி, தான் நலம் பெற்றால், உயிருடன் இருக்கும் போதே இறுதிச் சடங்கு செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக மனமுருக வேண்டிக் கொண்டுள்ளார். உடல்நலம் குணமடைந்து பூரண நலம் பெற்ற நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சவ வேடிக்கை வேண்டுதல் நிறைவேற்றி வருகிறார்.

சவவேடிக்கை வேண்டுதலில் முதலில் ஒரு மனிதன் இறந்தவுடன் செய்யும் சடங்குகளுடன் துவங்குகிறது, அவரது மகன் இறுதி சடங்கு செய்யப்படும் அனைத்து காரியங்களையும் செய்வார். அதனைத் தொடர்ந்து பாடை கட்டி, தேர் கட்டி கோவிலில் வழிபாடு நடத்திய உடன் வீதி வீதியாக இறுதி ஊர்வலம் நடத்தப்படுகிறது. பின்னர் இடுகாட்டிற்கு அழைத்துச் சென்று கோழிகளை பலியிட்டு பின்னர் கோழியை புதைத்து விடுவார்கள். இறந்தவராக இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் ஜெயமணி இடுக்காட்டிலிருந்து கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்புகிறார். இது கோவிலில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ஊர்வலமாக செல்லும் பொழுது ஊர் மக்கள் இளைஞர்கள் என அனைவரும் நடனமாடி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்கிறார்கள். இந்த வினோத நேர்த்திக்கடன் செலுத்தியதை அப்பகுதி மக்கள் புகைப்படம் எடுத்து தங்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். நவீன நாகரிகம் மற்றும் தொழில்நுட்பம் கிரகம் விட்டு கிரகம் செல்ல முயற்சி செய்து வரும் நிலையில் இதுபோன்ற மக்களின் மூடநம்பிக்கைகளும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டுதான் உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola