மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து 3 நாள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியின் தொடக்க விழா இன்று சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கத்தில் நடைபெற்றது. மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற கண்காட்சியினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த அறியப்படாத ஆளுமைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியில் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதேபோன்று, இந்திய அஞ்சல் துறை, இந்தியன் வங்கியின் சுய வேலை வாய்ப்பு நிறுவனம், காச நோய் தடுப்பு, பொது சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் ஆட்சியர் கார்மேகம் பார்வையிட்டார்.
கண்காட்சி தொடக்க விழாவில் உரையாற்றிய மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, மத்திய அரசின் சிறப்பான திட்டங்களை இளைஞர்கள், மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பல்வேறு தகவல்களை மக்கள் தொடர்பகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதன் பலன் மக்களை முழுமையாக சென்றடைய, திட்டம் குறித்த தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்வது அவசியமானதாகும். வெறும் 20 ரூபாயில் 2 லட்ச ரூபாய்க்கு காப்பீடு கிடைத்திடும் வகையில் பிரதமரின் உயிர்காக்கும் திட்டம் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழைகள் எளிதாக காப்பீடு பெற முடியும். வாழ்க்கையில் குழந்தைகள், மாணவ-மாணவியர், இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் என எந்தப் பருவத்தில் இருந்தாலும் அனைவருக்குமான பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள மக்கள் தொடர்பக கண்காட்சியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அறியப்படாத ஆளுமைகளை அடையாளப்படுத்திடும் வகையில் மக்கள் தொடர்பகம் நடத்தும் இதுபோன்ற கண்காட்சிகள் பல்வேறு தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்துகிறது. சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பெருஞ்சித்திரனார் போன்ற ஆளுமைகளை இதுபோன்ற கண்காட்சிகள் தெரிந்து கொள்ளும் போது இளைஞர்கள் உள்ளூர் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்கின்றனர். உள்ளூர் வரலாற்றில் இருந்துதான் மாநில வரலாறு எழுதப்படுகிறது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் பிறந்தவரான மூதறிஞர் ராஜாஜி சேலம் நகராட்சித் தலைவராக இருந்தபோதுதான் மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழில் தகவல்களை வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. பிரதமரின் கெளரவ நிதித்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை மூன்று தவணைகளாக, அவர்களின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பப்படுகிறது. இது மிகச்சிறந்த முயற்சியாகும் என்று பேசினார்.