சேலம் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய, கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு பெற்றுள்ளது.


முன்னாள் அமைச்சராக இருந்த காலத்தை வருமானத்திற்கு அதிகமாக ரூ. 11.32 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி 5 பேர் மீது நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, தர்மபுரியில் அன்பழகன் வீடு உட்பட 53 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும், சேலம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் ஒரு இடத்திலும் சோதனையானது காலை 6 மணி முதல் நடைபெற்று வந்தது.



அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியில் ராசி நகரில் வசித்து வரும் கரூர் மாவட்டத்தில் கனிமவளத் துறை உதவி இயக்குனர் ஜெயபால் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வந்தது. சேலம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கிருஷ்ண ராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். ஜெயபால் என்பவர் முன்னாள் பாமக மத்திய மாவட்ட தலைவரின் உறவினர் ஆவார்.



இதற்கு முன்பாக ஜெயபால் தர்மபுரி ஆகிய பகுதிகளில் பணியாற்றினார். அப்போது அவரது துறை ரீதியாக முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகின.


காலை 6:00 மணிக்கு துவங்கி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை 12 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வந்த நிலையில். சோதனை முடிவில் 40 லட்சம் ரொக்கம் 9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நகை வாங்கியதற்கான ஆவணங்கள், மற்றும் 20 லட்சம் மதிப்பிலான வங்கி இருப்பில் ரொக்கம் உள்ளிட்டவைகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அதிகாரிகள் எடுத்து சென்றனர். மொத்தமாக தமிழகம் மற்றும் தெலுங்கானாவில் நடத்தப்பட்ட சோதனையில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களிலிருந்து ரூ. 2.65 கோடி பணம், 6,637 கிலோ தங்க நகைகள் மற்றும் 13.85 கிலோ வெள்ளி நகைகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.