தெற்கு ரயில்வே சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணவுப் பொருட்கள் தினம்தோறும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சேலத்திலிருந்து அரிசி, ஜவ்வரிசி, மஞ்சள், மிளகாய், மிளகு, ஏலக்காய், தானியங்கள் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிற மாநிலங்களிலிருந்து கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் பூண்டு, வெங்காயம் பொன்ற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் சரக்குகள் கையாள்வதை அதிகரிக்க கோட்ட வணிக மேம்பாட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினர், விவசாய விளை பொருட்கள் மற்றும் விதைகள், பால் உள்ளிட்ட உணவு பொருட்கள், டிராக்டர், கதிர் அறுக்கும் இயந்திரங்கள், ரிக் வண்டிகளை சிறப்பு பார்சல் ரயில்கள் மூலம் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில், புதிய முயற்சியாக கால்நடைகளை சிறப்பு ரயிலில் அனுப்ப கோட்ட வணிக பிரிவு அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
முதல் முயற்சியாக 20 பசு மாடுகளை மேற்குவங்கத்திற்கு அனுப்ப சேலத்தை சேர்ந்த ஒரு வியாபாரி முன்வந்தார். அதன்படி நேற்று முன் தினம், சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 20 பசு மாடுகளை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நியூ ஜல்பைகுரிக்கு ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். சிறப்பு பார்சல் வேனில், அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி பசுக்களை ஏற்றினர். பசுவிற்காக வைக்கோல், தவுடு உள்ளிட்ட உணவையும் ஏற்றினர். ரயில் செல்லும் போது, அங்குமிங்கும் நகர்ந்து காயம் ஏற்படாத வகையில் இருக்க அந்த பார்சல் பெட்டியில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மாடுகளை கட்டிப்போட்டு, குறுக்கு கம்பிகளும் கட்டப்பட்டன. பிறகு, மேற்குவங்கம் சென்ற ரயிலில், அந்த சிறப்பு எல்எச்பி பெட்டியை இணைத்து, 20 பசு மாடுகளையும் அனுப்பி வைத்தனர்.
இதற்கு முன்னர் வட மாநிலங்களில், ராணுவ குதிரைகளையும், கால் நடைகளையும் சிறப்பு பார்சல் ரயில்களில் அனுப்பி வைக்கின்றனர். சேலம் கோட்டத்தில் இருந்து முதன் முறையாக பசு மாடுகள் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் சேலம் கோட்டத்திற்கு 3 லட்சத்து 19 ஆயிரத்து 245 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. வரும் காலங்களில் சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி கால்நடைகளையும் ரயில்கள் மூலம் அனுப்ப முடியும் என்ற வணிக வாய்ப்பு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அலுவலர்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ் பாராட்டினார்.