தருமபுரி நகர் பகுதியில் போக்குவரத்து விதி மீறல் குறித்து போக்குவரத்து காவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆட்டோ ஓட்டியதால்,15 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரி நகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போக்குவரத்து காவலர்கள், பொநுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தருமபுரி நகர் பகுதியில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதாக காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து தருமபுரி நகர் பகுதியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி மற்றும் ரகுநாதன் தலைமையில் காவலர்கள் ஆட்டோக்களில் சோதனை நடத்தினர். அப்பொழுது போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஆட்களை ஏற்றி செல்வது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆட்டோ இயக்குவது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல், ஆட்டோ ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆட்டோ இயக்கியதால், 15 நபரை கண்டுபிடித்து, ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்று போக்குவரத்து காவலர்களிடம் நகலை ஒப்படைத்து விட்டு ஆட்டோக்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர். அதேபோல் நகர் பகுதியில் உள்ள ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றக்கூடாது. ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயமா கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆட்டோ ஓட்டினாலோ, அதிகப்படியான ஆட்களை ஏற்றி சென்றாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.