நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள குட்டைகாடு கிராமத்தை சேர்ந்த 15 பெண்கள் வெங்காய அறுவடை பணிகளுக்காக மினி சரக்கு வாகனத்தில் கோரைக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது திடீரென மினி சரக்கு வாகனம் கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் மினி சரக்கு வாகனத்தில் இருந்த 10க்கும் பெண்கள் பலத்த காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பலத்த காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



நாமக்கல் மாவட்டம் விபத்தில் படுகாயமடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 நபர்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் தற்போதைய உடல்நிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.


இதைதொடர்ந்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது, சேலம் அரசு மருத்துவமனையில் எட்டு பேர் உள்ள நிலையில், ஆறு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 



மூளையில் ரத்த கசிவு மற்றும் காயங்கள் இருப்பதால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். இதில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர் அனைவரின் கண்காணிப்பில் உள்ளனர். படிப்படியாக உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு நிதியுதவி அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிவில் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.