சேலம் மாவட்டம் ஓமலூரில் பகுதியில் உள்ள அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது.


இந்தக் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன், தங்கமணி, விஜயபாஸ்கர்,கேபி அன்பழகன், காமராஜ், வளர்மதி, ராஜேந்திரபாலாஜி, செல்லூர்ராஜு, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், சம்பத், கேபி.முனுசாமி, வீரமணி, ஓஎஸ்.மணியன், பெஞ்சமின் மற்றும் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர்.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பாரத இந்து பரிவார் அமைப்பின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளதாக கூறினர்.மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பணியாற்ற தயாராக உள்ளதாகவும்,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியபடி செயல்பட இருப்பதாகவும் தெரிவித்தனர். இவர்களுடன் திருவண்ணாமலை கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் உடன் வருகை தந்தார்.



இதேபோன்று, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து, மனித உரிமைகள் கழக கட்சியின் சார்பாக சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு நேரில் வந்து மனித உரிமைகள் கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ்கண்ணன் தலைமையில் ஆதரவு தெரிவித்தனர்.


தமிழகத்தில் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாகவும்,இதற்கு பாடம் புகட்டும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற செய்ய உழைப்போம் என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி மட்டும் தான் வெற்றி பெறும் என்ற நிலையை மாற்றி, அதிமுகவை வெற்றி பெற செய்து சட்டமன்றத்தில் கூடுதலாக ஒரு உறுப்பினரை கொண்டு வர முயற்சி மேற்கொள்வோம் எனவும் கூறியுள்ளனர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களை வலுப்படுத்துவோம் என்றும் கூறினர்.