தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வீடுகள் ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று முதல் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், மாவட்டத்தில் உரங்கள், விதைகள் தட்டுப்பாடு இல்லமால் விவசாயிகளுக்கு கிடைக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எட்டயபுரம் தாப்பாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதல் கட்டமாக வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்த இடத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையெடுத்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, மாப்பிள்ளையூரணி, குளத்துள்வாய்பட்டி ஆகிய 3 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மறுவாழ்வு மையங்களில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் மொத்தம் 350 வீடுகள் உள்ளது. இதில் முதல் கட்டமாக 150 வீடுகளும், மாப்பிள்ளையூரணி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 52 வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில் தாப்பாத்தி முகாமில் உள்ள 52 வீடுகளுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. தாப்பாத்தி முகாமில் இடம் பிரச்சினை உள்ளது. அதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டத்தில் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார்கள். மழைக்காலத்திற்கு முன்பாக 4 மாதங்களில் வீடு கட்டும் பணிகள் முடிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பிக் மூலம் யூரியா, பொட்டாஷ் கிடைக்கிறது. உரங்களை எடுத்து கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும். பாசிப்பயறு, உளுந்து சூரிய காந்தி விதைகளும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிடைக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடுகள் செய்து வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வட்டாட்சியர் முத்துராமலிங்கம், எட்டயபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறியாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்