அத்தியவாசிய மளிகை பொருட்கள் விலை ஏற்றத்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொதுவாக மளிகை பொருட்களின் விலைவாசி உயர்வு என்பது கடந்த ஒரு மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 25 கிலோ அரிசி பை 945 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 1200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதே போன்று வெள்ளை உளுந்து கிலோ ஒன்றுக்கு 110 ரூபாயிலிருந்து தற்போது 150 வரை உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு 95 லிருந்து 115 வரை உயர்ந்துள்ளது. சீரகம் பெருஞ்சீரகம் போன்றவற்றின் விலையும் 10 ரூபாய் முதல் 15 வரை உயர்ந்துள்ளது. பொட்டுக்கடலை கிலோ ஒன்றுக்கு 20 வரை விலையேறி உள்ளது. எனவே வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. அதேபோன்று சில குறிப்பிட்ட நிறுவனங்களின் குளியல் சோப்பு விலை உயர்ந்துள்ளது. சென்ற மாதம் விலை உயர்ந்து காணப்பட்ட ஆயில் தற்போது விலை குறைந்துள்ளது.
மேலும், வர மிளகாய் வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்துள்ளது. முதல் தர வர மிளகாய் ரூபாய் 340 வரை விற்பனையாகிறது. அதேபோன்று மல்லி ஒரு கிலோ 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மல்லி மற்றும் மிளகாய் விலை உயர்ந்துள்ளதால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் குழம்புத்தூள் தனி மிளகாய் தூள் ஆகியவை 50 கிராமிற்கு 7 ரூபாய் வரை விலை ஏறி உள்ளன. குழம்பு மிளகாய் தூள் 50 கிராம் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்டத்தில் நகர்புறங்களில் உள்ள மளிகை கடைகளில் ஒரு விளையும் கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் இன்னும் அதிகமான கூடுதல் விளையும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக அரசு மளிகை பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விலைவாசி உயர்வு குறித்து குடும்ப தலைவிகள் கூறுகையில், குழம்பு வைக்க வேண்டும் என்றால் மிக முக்கியமாக தேவைப்படுவது மிளகாய் தூள். மிளகாய் தூள் அரைப்பதற்கு பட்டம் மிளகாய் மல்லி உள்ளிட்ட பொருள்கள் முக்கியமாக தேவைப்படுகிறது ஆனால் கடந்த வாரம் 150 ரூபாய் விற்ற பட்டம் மிளகாய் இன்று 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோன்று ஒவ்வொரு பொருளின் விலையும் ஒரு வாரத்திற்குள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று எதையும் சொல்லாமல் வாய் மூடித்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது” என்று தெரிவிக்கின்றனர். இந்த விலைவாசி உயர்வு காரணமாக ஏழை எளிய வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.