கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோருக்கு கடந்த 26-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் வழங்கிய உத்தரவின் விவரம் வெளியானது.  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவ 305 (மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல்) போக்சோ மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவுகளின் கீழ் மேற்குறிப்பிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.




மாணவியின் உடலில் இருந்த காயங்கள் மாணவியின் மரணத்தின் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், மாணவி மரணம் தொடர்பாக வெளியான சி.சி.டி.வி. காட்சிகள், சுவரில் படிந்திருந்த ரத்தக்கறை மாணவியின் மரணம் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.


நீதிபதி இளந்திரையன் ஜாமீன் வழங்கிய உத்தரவில், மாணவியின் உடலில் இருந்த காயங்கள் குறித்து “ மாணவியின் உடலில் இருந்த காயங்கள் 3வது மாடியில் இருந்து குதித்ததால் ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 3வது மாடியில் ரத்தக்கறை இருந்தது என்ற குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் அது சிவப்பு நிற பெயிண்ட் என்றும் கூறியுள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.




மேலும், மாணவி எழுதிய தற்கொலை கடிதத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்கள் 5 பேர் மீதும் எந்த இடத்திலும் மாணவி குறிப்பிடப்படவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களை நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதும், வேதியியல் சமன்பாட்டை படித்து ஒப்பிக்க சொல்வதும் ஆசிரியர் பணியில் ஒரு அங்கமாகும். இது மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல. எனவே, மனுதாரர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் என்ற குற்றச்சாட்டு பொருந்தவில்லை என்று கூறி கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.