பிரபல யூட்யூப் பதிவரும், மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் தொகுதி வேட்பாளருமான பத்மப்ரியா சூழலியல் தொடர்பான அவரது கருத்துகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் அறியப்படுபவர். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பத்மப்ரியா அண்மையில் ஆங்கிலச் செய்தி  இணையதளத்துக்கு அளித்த பேட்டி ஒன்றால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். அவரது கருத்தின் சுருக்கம் பின்வருமாறு:




“ பண்டைய காலத்தில் ஆணுக்குப் பெண் அடிமையாக இருந்தாள். ஆனால் காலப்போக்கில் அவளது உழைப்பின் காரணமாக அந்த நிலை மாறியது. இன்று இங்கே ஆணுக்குப் பெண் சமம். இப்போது மீண்டும் இங்கே அடிமை முறை கொண்டு வந்தால் ஆணுக்குப் பெண் அடிமையாக இருப்பாளா? மாட்டாள். அதுபோலதான் சாதியும். முந்தைய காலத்தில் சாதியின் பெயரால் ஒரு சிலருக்கு வாழ்வுரிமை, கல்வியுரிமை மறுக்கப்பட்டு வந்தது. அதற்குத் தீர்வாகத்தான் இடஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. இப்போது இங்கே எல்லோருக்கும் கல்வி உரிமை இருக்கும்போது சாதி என்கிற கட்டம் மட்டும் சான்றிதழ்களில் எதற்கு. அதை நீக்க ஏன் யாருமே இங்கு நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.


மக்கள் நீதி மய்ய வேட்பாளர் விண்ணப்பங்களில் சாதி என்கிற பகுதியே இல்லையே என்கிற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருக்கிறார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைத்தளங்களில் தீவிர விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.