திருவாரூரில் அதிமுக சார்பில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை கட்சியின் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ பேசியதாவது, அதிமுக தொண்டர்களின் பலத்தோடு நீண்டு நிலைத்திருக்கக்கூடிய மாபெரும் இயக்கமாகும். அனைவரையும் வாழ வைக்கும் இயக்கம் என்பதால், அனைத்து தரப்பினரின் ஆதரவும் இந்த இயக்கத்திற்கு உண்டு. கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் அனைத்தையும் அதிமுக கைப்பற்றி 100 சதவீத வெற்றியை பெற்றது. மீண்டும் நடைபெறக்கூடிய நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில்  அதே வெற்றியை அதிமுக பெறும். இந்த வெற்றிக்கு அதிமுக தொண்டர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 



 

ஜெயலலிதா ஆட்சியின்போது இந்த மாவட்டத்தில் கல்லூரிகள் அமைத்தல், பள்ளிகள் தரம் உயர்த்துதல், சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் நடைபெற்றது. அதேபோல  எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியிலும் சிறப்பான ஆட்சி நடைபெற்றது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.  கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களை வெகுவாக பாதித்தது. மக்கள் சங்கடத்திற்கு ஆளான அந்த நேரத்தில் அதிமுகவின் பணி ஈடுசெய்யமுடியாத பணியாகும்.  துயரங்களில் இருந்து மக்கள் உடனடியாக காப்பாற்றப்பட்டனர். இது போல் கடந்த கால அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்கள் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருப்பவர்களை வேட்பாளராக அறிவிப்பதன் மூலம் முதல் வெற்றியை பெறுவோம். தொடர்ந்து மக்களிடத்தில் வாக்கு சேகரித்து அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். 



 

தற்போது தீபாவளி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் நெல் உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெய்த மழையில் பயிர்கள் எல்லாம் மூன்று முறை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு  20,000 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் அதுபற்றி செவிசாய்க்காமல் முற்றிலும் பாதித்த பயிர்களுக்கு மட்டும் ஹெக்டேருக்கு ரூ 20 ஆயிரம் என்ற அளவில் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல. நீரில் மூழ்கிய அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு 20,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

 

குறுவை அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் திறந்த வெளியிலேயே வைக்கப்பட்டு தற்போதைய மழையால் முளைத்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வருகிறது. உடனடியாக கொள்முதல் செய்த இந்த நெல் மூட்டைகளை அறவைக்கு அனுப்ப வேண்டும். விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தொடர் மழை மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகியுள்ளனர். அந்த சங்கடங்களுக்கு ஆறுதல் அளிக்கும் மருந்தாக அதிமுகவினர் செயல்பட வேண்டும். அதன்மூலம் அதிமுகவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் டாக்டர் கோபால், சிவ.ராஜமாணிக்கம்,  மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அஷ்ரப், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.