அண்மையில் சக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை சட்ட ஒழுங்குப் பிரிவு டிஜிபி ராஜேஷ்தாஸை அவரது பொறுப்பிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.


குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அரசு அவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் தற்போது அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது தமிழக உள்துறைச் செயலகம்.ராஜேஷ் தாஸ் தமிழகக் காவல்துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.




தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராஜேஷ் தாஸ், சுற்றுப்பயணம் முடித்துத் திரும்புகையில் காரில்  உடன் அமர்ந்திருந்த சக பெண் ஐபிஎஸ் அதிகாரியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் எழுப்பியிருந்தார்.


மேலும், தான் புகார் அளிக்க இருப்பது தெரிந்து தனக்கு உயர் பொறுப்பில் இருந்த ஐ.பி.எஸ்.  அதிகாரிகள் வழியாகத் தனக்கும் தனது தனிப்பாதுகாவலருக்கும் ராஜேஷ் தாஸ் நெருக்கடி கொடுத்ததாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.  புகாரை ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    


தமிழக காவல்துறையில் உயர்பதவியில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது பெண் காவல் அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இது முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.