சென்னை எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத் திட்டத்தை கைவிடவேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அனைத்துக் கட்சிகளும் இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று பொன்னேரி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

  அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம் முழுவதுமாகக் கைவிடப்படும் என அறிவித்துள்ளார்.




330 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் துறைமுகத்தை 6110 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்ய அதானி நிறுவனம் முடிவு செய்தது. இதன் காரணமாக விரிவாக்கம் நடைபெறும் இடத்தைச் சுற்றி மீன்பிடி தடை விதிக்கவும் அதானி நிறுவனம் அரசுக்கு வலியுறுத்தி வந்தது.இதனால் அந்தப் பகுதி மக்களின் மீன்பிடி வாழ்வாதாரம் பாதிக்கப்படும், கடல் வாழ் உயிரினங்களின் அழிவு ஏற்படும் என்றும் தொழிற்சாலைக் கட்டுமானங்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணூரின் சுற்றுச்சூழல் மேலும் கேள்விக்குறியாகும் என்றும் மக்கள் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.


மேலும் பழவேற்காடு என்னும் கடலோர நாகரிகமே இதனால் அழிய வாய்ப்பிருப்பதாகச் சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி பொன்னேரி தொகுதியின் அதிமுக வேட்பாளர் பலராமனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம் அதானி துறைமுக விரிவாக்கம் முற்றிலுமாகக் கைவிடப்படும் என அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:






“மீனவர்களின் நலனைக் கருத்தில்கொண்டும் பொன்னேரி பகுதி மக்களின் கருத்துகளை ஏற்றும் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ஆளும் அதிமுக அரசு முற்றிலுமாகக் கைவிடுகிறது” எனக் கூறியிருக்கிறார்.