புதுச்சேரி மீனவர்கள் மோதல் காரணமாக மீனவ கிராமங்களில் 3ஆவது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரச்சினை தொடர்பாக அமைச்சர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுக்கிடையே கடந்த 28ஆம் தேதி நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், பயங்கர ஆயுதங்களுடனும் தாக்கிக் கொண்டனர்.


 



இதுபற்றி தெரியவந்ததும் வீராம்பட்டினம், நல்லவாடு மற்றும் வம்பாகீரபாளையம் மீனவர்கள் அந்தந்த பகுதிகளில் கடற்கரையில் ஆயுதங்களுடன் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி நிலையை   கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீனவ கிராமங்களில் மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க நல்லவாடு, வம்பா கீரப்பாளையம், வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.



மோதல் தொடர்பாக 3 கிராமங்களை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீனவ கிராமங்களில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் சபாநாயகர் செல்வம், நல்லவாடு மீனவர்களுடனும்,  அமைச்சர் லட்சுமிநாராயணன் வீராம்பட்டினம் மீனவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.


3 மீனவ கிராமங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், ஜிந்தா கோதண்டராமன், செல்வம், ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 3ஆவது நாளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் போலீஸ் சூப்பிரண்டு, ரச்சனாசிங் தலைமையில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். மோதல் மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக 4 ஆவது நாளாக  மீனவர்கள்  மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.




இந்தநிலையில் நேற்று மாலை மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சட்டசபை வளாகத்தில் நல்லவாடு, வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம்  பகுதி   மீனவ பிரதிநிதிகளை  அழைத்து தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீனவர்கள் சண்டை போட்டுக்கொண்டால் மீனவ சமுதாயத்திற்கு தான் நஷ்டம். எனவே யாரும் பிரச்சினையில் ஈடுபட வேண்டாம். அமைதி காக்க வேண்டும். யாராவது புரளியை கிளப்பி விட்டால் உடனடியாக மோதலுக்கு தயாராக கூடாது.


இன்னும் ஓரிரு நாளில் 3 மீனவ கிராம மக்களையும் ஒன்றாக வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் பின்னர் நீங்கள் தொழிலுக்கு செல்லலாம். அதுவரை அமைதி காக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர். இதனை கேட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் அமைதி காப்பதாக அமைச்சர்களிடம் உறுதியளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் மீனவர்கள் மோதல் பிரச்சினையில் தற்காலிகமாக சமரசம் ஏற்பட்டுள்ளது.


புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் இருதரப்புக்கு இடையே மோதல் - போலீஸ் துப்பாக்கிச்சூடு