கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா பாதிப்புகள் குறைந்து மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் 3 மாதங்களுக்கு பிறகு, 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 646 உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வருகையினால் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டும் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமரவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், மாணவர்களுக்கு நாள்தோறும் உடல்வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தினசரி வந்து செல்ல அனுமதியில்லை. கேரளாவில் இருந்து வரும் கல்லூரி மாணவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெறுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தவும், சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் வருகை தந்தனர். காலை 8 மணி முதல் மாணவர்கள் பள்ளிக்கு வரத் துவங்கினர். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முகக்க கவசம் அணிய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் அறிவுறுத்தினர். பள்ளிகளில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசணைகள் மற்றும் அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கிய பின்னர், வகுப்புகளை நடத்தினர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சக நண்பர்களை பார்த்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பாடத்தில் உள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்க முடியும் என்பதால் படிக்க எளிதாக இருக்கும் என மாணவர்கள் தெரிவித்தனர்.