தமிழகத்தை போல மேற்கு வங்காளத்திலும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்களம் சூடு பிடித்து வருகிறது. வரும் 27ந் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. மம்தா பனர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், திலீப் கோஷ் தலைமையிலான பாஜக மற்றும் முகம்மது சலீம் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி என மும்முனைத் தாக்குதலால் தேர்தல் களம் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது. மும்முனைத் தாக்குதல் என்றாலும் மோதல் மம்தாவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே என்பது நெருப்புப் பறக்கும் பிரசாரங்களின் வழி தெரியவருகிறது. தேர்தல் காலம் நெருங்கி வருவதையொட்டி பிரதமர் மோடியும் வங்காளத்தில்தான் முகாமிட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செல்வாக்கு இன்னும் ஆக்கிரமிக்காத பெரிய மாநிலங்களில் மேற்கு வங்காளம் மட்டுமே எஞ்சியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம் குறித்து மேற்கு வங்கச் செய்தித்தாள்களில் வெளியான விளம்பரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. செய்தித்தாள் விளம்பரத்தில் லட்சுமி என்கிற பெண் இடம்பெற்றிருந்தார். 
“பிரதமர் மோடியின் வீட்டு வசதித் திட்டத்துக்கு நன்றி, எனக்குத் தற்போது வீடு கிடைத்திருக்கிறது. என்னைப்போல 24 லட்சம் பேர் பிரதமரின் இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்” என லட்சுமி கூறுவது போல விளம்பரம் இருந்தது. 



பிரபல யூட்யூப் ஊடகம் ஒன்று செய்தித்தாளில் இடம்பெற்றிருக்கும் இந்த லட்சுமியைத் தேடிப் பயணப்பட்டது. பிரதமரால் வீடு கிடைத்தது என்ற விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள லட்சுமி உண்மையில் இடிந்து விரிசல் விழுந்த நிலையில் இருக்கும் ஒரே அறை வாடகை வீடு ஒன்றில் வசிக்கிறார் என்பது நேரில் சென்று சந்தித்தவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டுபண்ணியிருக்கிறது. 




அந்த வீடும் என்னுடையது இல்லை. கழிவறை வசதி இல்லாத ஐயாயிரம் ரூபாய்க்கான இந்த வாடகை வீட்டில்தான் எனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் ஐம்பது வருடங்களாக வசித்து வருகிறேன்



பிறகு ஏன் பிரதமரால் வீடு கிடைத்தது எனக் கூறியுள்ளீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு லட்சுமி அளித்த பதில்தான் ஹைலைட்!. அவர் கூறியதாவது,”நான் பாபுகாட் பகுதியில் 15 பிப்ரவரி 2021 தொடங்கி பத்து நாட்கள் வேலை செய்தேன். கழிவறை வசதி கொண்ட வீடு அது. அந்த வீடுதான் இந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இந்தப் புகைப்படத்தை எப்போது எடுத்தார்கள் எனத் தெரியவில்லை.அந்த வீடும் என்னுடையது இல்லை. கழிவறை வசதி இல்லாத ஐயாயிரம் ரூபாய்க்கான இந்த வாடகை வீட்டில்தான் எனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் ஐம்பது வருடங்களாக வசித்து வருகிறேன்” எனச் சிரித்தபடியே பகிர்கிறார்.அவர் இருக்கும் பகுதியில் உள்ள பொதுக்கழிவறையைதான் ஐந்து ரூபாய்க் கட்டணம் செலுத்தி உபயோகிப்பதாகச் சொல்கிறார். 




மேலும், “பிரதமர் வீட்டு வசதித் திட்டம் பற்றியோ அல்லது அதன் வழியாக வீடு கிடைக்கும் என்பதோ எனக்குத் தெரியாது. அருகில் இருக்கும் வீடுகளில் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து வரும் ஐயாயிரம் ரூபாய்  வருமானத்தில்தான் குடும்பம் நடத்துகிறேன்.2009ல் எனது கணவர் இறந்ததை அடுத்து எனக்கென்று நிரந்தரமாக எந்த வேலையும் கிடைக்கவில்லை” என்கிறார். 
இந்தச் செய்திக்குப் பிறகாவது லட்சுமிக்குக் கழிவறையுடன் கூடிய வீடு கிடைக்கட்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து  வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் விளம்பர மற்றும் ஐ.டி. பிரிவினர் இது போன்று தவறான தகவல்களைப் பகிர்வது இது முதன்முறையல்ல.