வரும் மார்ச் 23ம் தேதியோடு தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடையவுள்ளது. யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக சுமார் ஓர் ஆண்டுகாலமாக உலகமே ஸ்தம்பித்து உள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டது. 


தடுப்பூசி கண்டறியப்பட்ட செய்தி, அஞ்சி நடுங்கிய மக்கள் அனைவரும் ஒரு நிம்மதி பெருமூச்சு விட வாய்ப்பாக இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் ஒரு அச்ச நிலை மக்கள் மனதை ஆட்கொண்டுள்ளது. சுமார் 2 மாத இடைவெளிக்கு பிறகு தற்போது இந்திய அளவிலும், தமிழக அளவிலும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.   


தமிழகத்தில் 9,10,11 ஆகிய வகுப்பு மாணவர்கள், பள்ளிகளுக்கு சென்ற நிலையில் தற்போது மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் திரு. ரந்தீப் குலேரியா கொரோனா தடுப்பூசி சுமார் 8 முதல் 10 மாதம் வரை பாதுகாப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். 


மேலும் மக்கள் சற்று நிதானத்துடன் செய்லபட வேண்டும் என்றும், Covishield மற்றும் Covaxin ஆகிய இரண்டு மருந்துகளுமே நல்ல பலனை அளித்துவருவதாகவும் தெரிவித்தார்.