சட்டமன்றத் தேர்தலையொட்டி கோவை தெற்கு பகுதி தேர்தல் பிரசாரம் மிகவும் சூடுபிடித்து வருகிறது. திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணிகள் சார்பில் காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன், பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசன் மற்றும் அமமுகவின் ஆர்.துரைசாமி என நான்குமுனைப் போட்டியாகியிருக்கிறது அந்தத் தொகுதி. இந்த நிலையில் அந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசனுக்கு நேற்று பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசன் பழக்கூடை அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ட்வீட் செய்திருந்த வானதி,
”கோவை பகுதியில் விருந்தினராக வந்து இருக்கும் திரு. கமல் ஹாசன் அவர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஓய்வில் இருப்பதாக நான் அறிந்தேன். அவர் விரைவில் குணமடைய கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் மூலம் ஒரு பழக்கூடை அனுப்பியுள்ளேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு மறுமொழி அளித்து ட்வீட் செய்திருந்த கட்சியின் துணைத்தலைவரும் சிங்காநல்லூர் தொகுதியின் வேட்பாளருமான மருத்துவர் மகேந்திரன்,
"இன்று தலைவருக்கு பழக்கூடை கொடுத்தனுப்பியுள்ளார் அருமைச் சகோதரி. அன்பிற்கு நன்றிகள். விரைவில் தலைவரின் வெற்றிக்கு பூங்கொத்து கொடுத்தனுப்புவார்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இருவரது ட்வீட்டுகளிலும் மோதல் தெரிந்தாலும் முந்தைய நாள் மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிடும் நிலையில், இது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கான சமிக்ஞையா எனச் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வுகளுக்கு பதிலாகச் சீட் தேர்வுகள் நடத்துவது, மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, மரபணு மாற்றப் பயிர்களைத் தமிழக விவசாயப் பல்கலைக்கழகத்தின் வழியாக விவசாயிகளிடம் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களை முன்மொழிந்திருந்தனர். நடைபெறுகின்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்கவில்லை என்றாலும் அந்தக் கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டிலியே இந்த அம்சங்கள் இருப்பது கவனிக்கத்தக்கது.
இதைச் சுட்டிக்காட்டி ‘பழக்கூடை’ எதிர்கால நட்புக்கான அஸ்திவாரம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.