மும்பையில் ஒமிக்ரான் XE என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக ஒமிக்ரான் XE என்ற வகை வைரஸ் கண்டறியப்பட்டநிலையில் தற்போது மும்பையில் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை ஒமிக்ரான் வைரஸ் 10 மடங்கு அதிக வேகத்துடன் பரவக்கூடிய வைரஸ் என்று தெரியவந்துள்ளது. பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) நடத்திய சோதனையில் ஒரு நோயாளிக்கு 'எக்ஸ்இ' வகை தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவருக்கு கொரோனா வகை 'கபா' தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நோயாளி கடந்த பிப்ரவரி 10 ம் தேதி அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த 50 வயதான பெண் என்றும், இவர் 2 தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த பெண் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தவுடன் கொரோனா பரிசோதனை செய்ததாக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தகவல் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரானின் BA.2 துணை மாறுபாட்டை விட XE வகை10% அதிவேகமாக பரவும் என்றாலும், இதுவரை பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த 230 நோயாளிகளின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டதில், 228 பேருக்கு ஒமிக்ரான், ஒரு கப்பா மற்றும் ஒரு XE வகை கண்டறியப்பட்டுள்ளது.
பரிசோதனை மேற்கொண்ட மொத்த 230 நோயாளிகளில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், யாருக்கும் ஆக்ஸிஜன் அல்லது தீவிர சிகிச்சை தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 பேர்களில் 12 பேர் தடுப்பூசி போடாதவர்கள், ஒன்பது பேர் 2 தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் என்றும் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்