தற்போதைய தமிழ்நாடு அரசியல் நிலவரங்களைப் பார்த்தால் அதிமுக-பாஜக கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவேத் தெரிகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை இந்தக் கூட்டணி இரண்டிலும் படுதோல்வியையே சந்தித்தது. நாடாளுமன்றத்தேர்தலில் 1 தொகுதியை மட்டும் அதிமுக வென்றது. சட்டமன்றத்தேர்தலில் தோற்று ஆட்சியையே இழந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தோல்விக்குக் காரணம் என்று அதிமுகவினராலேயே விமர்சிக்கப்பட்டது. அதோடு, தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக்கொண்டிக்கும் நிலையில் பாஜக எடுத்திருக்கும் விவகாரம் அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.
ஏற்கனவே இஸ்லாமிய வாக்குகளை அதிமுக இழந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில் தற்போது கிறிஸ்தவர்களின் வாக்குகளையும் அதிமுகவிற்கு கிடைக்காமல் போகும் வேலையை கூட்டணிக்குள் இருந்தே பாஜக செய்கிறது. கிறிஸ்தவர்களின் வாக்குகளும் போய்விட்டால் சிறுபான்மையினரின் ஆதரவின்றி இந்துக்களின் வாக்குகளை நம்பியே தேர்தலில் களமிறங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிமுக என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதோடு, அதிமுகவினரின் ஆண்மை குறித்து பேசிய நயினார் நாகேந்திரனின் பேச்சு அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் 20% இடங்களை பாஜக கேட்டிருந்த நிலையில் 5% இடங்களுக்கு மேல் தரவே முடியாது என்று பிடிவாதம் பிடித்துவருவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கப்போவதாக அறிவித்திருக்கிறது பாஜக.
அதிமுகவினரை பாஜக நெருக்கும் இந்த காலத்திற்கு மத்தியில், பாஜகவை அதிமுக நெருக்கிய காலம் ஒன்று இருந்தது. 1996ல் ஆட்சியை குறுகிய காலத்திற்குள் இழந்த பாஜக, 1998லாவது நிலையான ஆட்சியமைக்க வேண்டும் என்று நினைத்து பிரம்மாண்ட கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி வைத்திருந்தன. அந்த சமயத்தில் மாநிலத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. 1998ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் கோவை உள்பட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ இதையே காரணமாகச் சொல்லி அந்தத் தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்றது அதிமுக கூட்டணி. திமுக 6 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார்.
பெரிய கூட்டணியாக இருந்தாலும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததால் கூட்டணி ஆட்சியே நடைபெற்றது. ஆரம்பம் முதலே பல கட்சிகள் வாஜ்பாய்க்கு பெரும் தலைவலியாக இருந்தன. அதில் முக்கியமான கட்சி அதிமுக. வாஜ்பாய்க்கு ஆதரவளிக்க இழுத்தடித்தது முதல் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தார் ஜெயலலிதா. விதி 356ஐ பயன்படுத்தி திமுக ஆட்சியை கலைக்கவேண்டும். தன்மீது போடப்பட்ட வழக்குகளை முடிக்கவேண்டும். சுப்பிரமணிய சுவாமிக்கு நிதியமைச்சர் பதவி வேண்டும்.
தலைமைச்செயலாளர் அரிபாஸ்கர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தார் ஜெயலலிதா. ஆனால் திமுக ஆட்சியை கலைக்க மறுத்ததோடு, ஜெயலலிதாவின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டார் வாஜ்பாய். வாஜ்பாய் அரசை கலைத்துவிட்டுதான் தமிழ்நாடு திரும்புவேன் என்று டெல்லி புறப்பட்ட ஜெயலலிதா அதை செய்துவிட்டு தான் தமிழ்நாடு திரும்பினார். அதிமுக அளித்த ஆதரவை வாபஸ் பெற அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 269 ஆதரவு வாக்குகளையும், 270 எதிர்ப்பு வாக்குகளையும் பெற ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் வாஜ்பாய். ஆட்சி கலைக்கப்பட்டது. ஆட்சிக்கலைப்புக்குப் பின் பேட்டியளித்த வாஜ்பாய் அதிமுகவுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலமாகும் என்று கூறியிருந்தார்.
ஜெயலலிதாவின் இந்த செயல்தான் திமுக-பாஜக கூட்டணி உருவாகக் காரணமாக அமைந்தது. 1999ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தது அதிமுக கூட்டணி. பின்னர் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மாநாட்டில் பேசிய ஜெயலலிதா..'இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஓர் உத்தரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு அந்தத் தவறுக்குப் பரிகாரமாகத்தான் பிஜேபி ஆட்சியை நான் கவிழ்த்தேன்.'' என்றார். ஆனால் 1998ல் வாஜ்பாய் ஆட்சியை கலைத்த ஜெயலலிதா 2004ல் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். ஆனால், தேர்தலில் ஒரு இடத்தில் கூட அதிமுகவால் வெற்றிபெற முடியவில்லை.
அதன்பின்னர் ஜெயலலிதா இருந்தவரை ஒருமுறை கூட அதிமுகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை. 2014ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு சாதகமான சூழ்நிலையே இந்தியா முழுவதும் நிலவியது. ஆனால்,இந்தியாவின் சிறந்த நிர்வாகி குஜராத்தைச் சேர்ந்த மோடியா இல்லை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த லேடியா என்றார். அந்த தேர்தலில் அதிமுக அபார வெற்றிபெற்றது.
ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நிலைமை தலைகீழானது என்றே கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆட்சியை தக்கவைக்க பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டது அதிமுக. மோடியா? இல்லை இந்த லேடியா என்று கேள்வி கேட்டவரின் கட்சியினர் மோடிதான் எங்கள் டாடி என்று தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டனர். 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் ஊழல் கட்சிகள்; இவற்றுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளும் ஊழல் கட்சிகளே என்று பேசினார் அமித்ஷா. ஆனால் ஊழல் கட்சி என்று சொன்ன அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. பாஜகவை விருப்பப்பட்டெல்லாம் அதிமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. தொண்டர்களுக்கு அதிருப்தி இருந்தாலும் நிர்பந்தங்களின் காரணமாகவே ஏற்றுக்கொண்டது என்று கூறினர் அரசியல் விமர்சகர்கள். அமைச்சர்கள் வீட்டில் தொடர் ரெய்டு, தலைமைச் செயலகத்தில் ரெய்டு, ஜெயலலிதா உயிரிழந்த விவகாரம் என்று அதிமுக தலைமைகளை தங்கள் பிடியில் வைத்துக்கொண்டே வலுக்கட்டாயமாக கூட்டணிக்குள் இணைந்து கொண்டது பாஜக. நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளைப் பெற்று ஒன்றிலும் வெல்லவில்லை பாஜக.
சட்டமன்றத் தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணியுடன் சந்தித்து தோல்வியை சந்தித்திருக்கிறது. சமீபத்தில் நடந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலிலும் கூட பெரும் தோல்வி. இந்த தோல்வி தொடர்கதையாகக்கூடாது என்பதற்காகவே அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவிடம் கடுமை காட்டியிருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். உள்ளாட்சித் தேர்தலில் தான் தனித்துப் போட்டியிடுகிறோம். ஆனால் அதிமுகவுடனான கூட்டணித் தொடரும். 2024 தேர்தலிலும் இந்த கூட்டணித் தொடரும் என்று கூறியிருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர்கள் நினைத்தால் போதுமா நாங்கள் நினைக்க வேண்டாமா என்றிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், 2024 கூட்டணியை மேலே இருக்குப்பவர் தான் முடிவு செய்வார் என்று கிசுகிசுக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.