நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலோ, பொது அமைதியை குலைக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர் ஒருவர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், ஒரு மதத்திற்கு எதிராகவும் கருத்தக்களை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், இந்த வீடியோவை தமிழ்நாடு பா.ஜ.க.வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த வீடியோவை பகிர்ந்திருந்த சவுதாமணி தைரியமா? விடியலுக்கா? என்றும் கருத்து பதிவிட்டிருந்தார்.




அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். மேலும், மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களது விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் எனபதை உறுதி செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுபோன்ற ஏராளமான வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளார்.


அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல, கடந்த 28-ந் தேதி பா.ஜ.க. நிர்வாகி மீது மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.




கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மாணவியை பள்ளி நிர்வாகம் மதம்மாற்றச் சொல்லி வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். ஆனால், போலீசார் விசாரணையில் மாணவியை மதம்மாற்றச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று தகவல்கள் வெளியானது. தற்போது, தஞ்சை மாணவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Thanjavur Girl Case: மாணவி தற்கொலை விவகாரம்: சிபிசிஐடி விசாரணை கேட்ட மாணவியின் தந்தை - சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண