நம் வாழ்வில் பிறப்பு எப்படி ஒரு சம்பவமோ அதேபோல்தான் இறப்பும். நம் பிறப்புக்கு எப்படி காரணம் காண கஷ்டப்படுகிறோமோ அதேபோல் தான் இறப்புக்கும் காரணம் தேடமுடியாது. யாருடைய மூச்சு எப்போது முடியும் என்று யாராலும் கணக்கிட முடியாது. அந்த வகையில் இந்த 2021 ஆம் ஆண்டில் பலர் தங்களது உடலை விட்டு பிரிந்துள்ளனர். அதன்படி இந்த ஆண்டு அரசியல் பிரபலங்கள் யாரெல்லாம் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம். 


தா.பாண்டியன்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தா. பாண்டியன் சிறுநீரகக் கோளாறால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப்பலனின்றி பிப்ரவரி 26-ஆம் தேதி உயிரிழந்தார். 




திண்டிவனம் ராமமூர்த்தி


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(87) 1984ஆம் ஆண்டு முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். 2011-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் சில மாதங்களிலேயே கட்சியை கலைத்துவிட்டு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 


திமுகவின் வீரபாண்டி ராஜா


வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக அக்டோபர் 2ஆம் தேதி உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன், வீரபாண்டி ராஜா. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு, தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


நன்மாறன்


 சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் நன்மாறன். மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவர். மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த நன்மாறன், கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அக்டோபர் 28-ஆம் தேதி உயிரிழந்தார். 


மதுசூதனன்


அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 


கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத்தலைவராக மதுசூதனன் இருந்து வந்தார். 2017-ம் ஆண்டு அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மதுசூதனன் செயல்பட்டார்.




எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி


மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி. 1984ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சைப்பெற்று வந்தபோது லீலாவதி எம்.ஜிஆருக்கு தனது ஒரு சிறுநீரகத்தை கொடுத்து உதவியவர் லீலாவதி. 


உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த லீலாவதி கடந்த நவம்பர் 26ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  


ரோசைய்யா 


தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். ஆனால் சிகிச்சைப்பலனின்றி கடந்த டிசம்பர் 4ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 88. ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர். உயிரிழந்த பிறகு, 2009ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்றார் ரோசைய்யா. 1979 முதல் 2009 வரை அமைச்சராக இருந்தவர். 16 முறை ஆந்திர மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். 


2011ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் ஜெயலலிதாவின் பற்றால் தொடர்ந்து பதவிகாலம் முழுவதும் நீடித்தார். 


திமுக ஒன்றியச் செயலாளர் ச. குமரவேல்


நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு பகுதியில் வசித்து வந்தவர் திமுக ஒன்றியச் செயலாளர் ச. குமரவேல்(78). திமுகவில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை கையாண்டவர். மருதூர் தெற்கு ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலும் இருந்துள்ளார். கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி உயிரிழந்தார். 




காங்கிரஸ் மூத்த நிர்வாகி மோசஸ்


காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏவுமான மோசஸ் கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர். இவர் 1971, 1989, 1991, 1996 என்று நான்கு முறை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். வயது மூப்பு காரணமாக இவர் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி உயிரிழந்தார். 


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். கருணாநிதியின் மீது மிகுந்த பற்று கொண்ட அவர் 50 வருட காலம் அவருக்கு உதவியாளராக இருந்துள்ளார். திமுகவுக்கும் அவருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. கருணாநிதியின் மறைவுக்கு பிறகும் கூட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் நெருங்கியே பழகி வந்தார். 




இந்நிலையில் உடலநலக்குறைவு காரணமாக சண்முகநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 21-ஆம் தேதி உயிரிழந்தார். 


இதேபோல், மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ கே.ராமச்சந்திரன் கொரோனாவால் உயிரிழந்தார். தஞ்சை காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், காமராஜரின் நெருங்கிய நண்பருமான தஞ்சை துளசி அய்யா வாண்டையார் முதுமை காரணமாக சென்னையில் கடந்த மே 17-ஆம் தேதி உயிரிழந்தார்.