தமிழக தேர்தல் ஆணையம் நகர்ப்புற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரம் காட்டி வரும் நிலையில் அரசியல் கட்சிகளும் தங்கள் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக திமுக ,அதிமுக, பாஜக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தற்போது வரவிருக்கும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க வரிந்துகட்டிக்கொண்டு தேர்தல் வேலைகளை தற்போது தொடங்கி உள்ளனர்.




பல்வேறு அரசியல் செயல்பாட்டுக்கு இடையில் கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் தேர்தலை கரூர் மாநகராட்சி சந்திக்க உள்ளது. மற்றும் பள்ளப்பட்டி, புகழூர், குளித்தலை உள்ளிட்ட நகராட்சிகளுக்கும் தேர்தல் வேலைகளை திமுக, அதிமுக, கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்றி வரும் நிலையில் கரூரில் உள்ள மிகப்பெரிய திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அந்த கூட்டத்தில் வருகை புரிந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் வரவேற்பு அளித்ததுடன் உணவு உபசரிப்பு நிகழ்வும் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகளுடன் செந்தில் பாலாஜி உணவுக்காக வரிசையில் நின்று உணவு அருந்திய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.




கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட திமுகவினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக முதல்வர் ஸ்டாலினை உருவாக்க வேண்டும்” என கரூரில் நடைபெற்ற மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.




கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு திமுக உறுப்பினராக சேர்க்க வேண்டும். முழுமனதோடு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது இதில்  ஒவ்வொரு வாக்கும் முக்கியமாகும். வாக்காளர்களின் ஒவ்வொரு கோரிக்கையும் முக்கியமாகும். திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். குறிப்பாக புதிய உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக்கூடாது. முழு விருப்பத்தோடு அவர்களை உறுப்பினராக சேர்த்தால் தான் அது திமுகவிற்கு வாக்காக மாறும். 




”உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மக்களவை தேர்தல் வர உள்ளது. பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் அடுத்த பிரதமரை உருவாக்க கூடிய சக்தியாக முதல்வர் ஸ்டாலினை உருவாக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். அதற்கு தொண்டர்கள் ஆகிய நாம் முழுமனதோடு செயல்பட வேண்டும் என்றார். இந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ,அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.