அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு 2019ல் வெளியான பிறகு அயோத்தி பகுதி முதன்மை ரியல் எஸ்டேட் விற்பனை மையமாக மாறியுள்ளது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி க்ஷேத்ர அறக்கட்டளை இது வரை 70 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் தனியாக நிலம் வாங்க விரும்பும் நபர்களும் திட்டம் வேகம் எடுக்கும் போது ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பாக்கின்றனர். அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்காக இல்லை. 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ராமர் பிறந்த இடம் இங்குதான் என்றும், அங்கே ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும் விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள் என பல்வேறு அமைப்பினர் திரண்டு சென்று பாபர் மசூதியை இடித்தனர். அதனால் பெரிய கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அது சம்பந்தமான வழக்குகள் மூலம் இந்தியா முழுவதும் பரபரப்பான சூழ்நிலையே நிலவி வந்தது. நூற்றாண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்காடப்பட்ட ஸ்ரீ ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், முஸ்லிம்களுக்கு தனியாக மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது.


அப்படியாக தீர்ப்பு வந்ததில் இருந்து அயோத்தியில் நிலம் வாங்க ஆர்வம் காட்டும் நபர்களில் உள்ளூர் எம்.எல்.ஏக்கள், அயோத்தியில் பணியாற்றும் அதிகாரிகளின் உறவினர்கள், உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்குவார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள், மேயர் மற்றும் ஒ.பி.சி. ஆணையத்தின் உறுப்பினர் தங்களின் சொந்த பெயரில் நிலம் வாங்க, டிவிஷ்னல் கமிஷ்னர், சப்-டிவிஷ்னல் மஜிஸ்திரேட், துணை நிலை ஐ.ஜி, காவல்துறை சர்க்கிள் அதிகாரி, மாநில தகவல் ஆணையர் ஆகியோரின் உறவினர்கள் அயோத்தியில் நிலம் வாங்கியுள்ளனர். விசாரணை செய்த 14 வழக்குகளில், அனைவரும் அயோத்தி கோயிலுக்கு 5 கி.மீ சுற்றளவிற்குள்1 நிலம் வாங்கியுள்ளது தெளிவாகியுள்ளது. தலித் கிராம மக்களிடம் இருந்து நிலம் வாங்கியதில் முறைகேடுகள் நடத்தியதாக கூறப்படும் மகரிஷி ராமாயண வித்யாபதி அறக்கட்டளை நிறுவனத்திடம் இருந்து 5 அதிகாரிகளின் குடும்பத்தினர் நிலம் வாங்கியுள்ளனர். தற்போது இந்த அறக்கட்டளை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நிலம் வாங்கிய முக்கிய புள்ளிகள் மற்றும் அவர்கள் அது குறித்து கூறும் கருத்துக்கள்:



      1. எம் பி அகர்வால், அயோத்தியின் டிவிஷ்னல் கமிஷ்னர் (நவம்பர் 2019 முதல்).


அவரது மாமனார் கேசவ் பிரசாத் அகர்வால் டிசம்பர் 10, 2020 அன்று பர்ஹாதா மஞ்சாவில் 2,530 சதுர மீட்டர் நிலத்தை MRVT (Maharishi Ramayan Vidyapeeth Trust) நிறுவனத்திடமிருந்து ரூ. 31 லட்சத்திற்கு வாங்கினார். அவரது மைத்துனர் ஆனந்த் வர்தன் அதே கிராமத்தில் 1,260 சதுர மீட்டர் இடத்தை MVRT நிறுவனத்திடம் இருந்து ரூ.15.50 லட்சத்திற்கு வாங்கினார். குறிப்பிடத்தக்க வகையில், கமிஷனரின் மனைவி தனது தந்தையின் நிறுவனமான ஹெல்மண்ட் கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் எல்எல்பி நிறுவனத்தின் பங்குதாரராக இருப்பதாக பதிவுகள் காட்டுகின்றன.


அகர்வால் கருத்து: எம் பி அகர்வால் தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று கூறி கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தார். அவரது மாமனார் கேசவ் பிரசாத் அகர்வால், "நான் ஓய்வு பெற்ற பிறகு அயோத்தியில் வாழ திட்டமிட்டுள்ளதால் இந்த நிலத்தை வாங்கினேன். இதில் தன்னுடைய மருமகனுக்கு எந்த பங்கும் இல்லை" என்றும் கூறியுள்ளார்.



  1. புருஷோத்தம் தாஸ் குப்தா: அயோத்தியின் தலைமை வருவாய் அதிகாரியாக 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி முதல் செப்டம்பர் 10, 2021 வரை பணியாற்றினார். தற்போது கோரக்பூரில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக (எக்ஸ்க்யூட்டிவ்) பணியாற்றி வருகிறார்.


அவருடைய மைத்துனர் அதுல் குப்தாவின் மனைவி த்ரிபாதி குப்தா, அமர் ஜீத் யாதவ் என்பவருடன் இணைந்து பர்ஹதா மஞ்சா பகுதியில் 1,130 சதுர மீட்டர் நிலத்தை ரூ. 21.88 லட்சத்திற்கு MRVT – நிறுவனத்திடம் இருந்து 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி வாங்கியுள்ளார்.


புருஷோத்தமின் கருத்து : புருஷோத்தம் தாஸ் குப்தா, எம்ஆர்விடிக்கு எதிரான விசாரணையில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், தன் பெயரில் எந்த நிலத்தையும் வாங்கவில்லை என்றும் கூறினார். அதுல் குப்தா, நிலத்தின் விலை குறைவாக இருந்ததால் வாங்கினேன் என்றும் புருஷோத்தமனின் உதவியை பெறவில்லை என்றும் பதில் கூறியுள்ளார்.



  1. இந்திர பிரதாப் திவாரி, எம்எல்ஏ, கோசைகஞ்ச், அயோத்தி மாவட்டம்.


நவம்பர் 18, 2019 அன்று பர்ஹாதா மஞ்சாவில் 2,593 சதுர மீட்டர் நிலத்தை MRVT நிறுவனத்திடமிருந்து ரூ.30 லட்சத்திற்கு வாங்கினார். 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி அன்று, அவரது மைத்துனர் ராஜேஷ் குமார் மிஸ்ரா, ராகவாச்சார்யாவுடன் சேர்ந்து, சூரஜ் தாஸிடம் இருந்து ரூ. 47.40 லட்சத்துக்கு பர்ஹாதா மஜாவில் 6320 சதுர மீட்டர் நிலத்தை வாங்கினார்.


ராஜேஷின் கருத்து: "நான் என்னுடைய சொந்த சேமிப்பில் இருந்து நிலத்தை வாங்கினேன். திவாரிக்கு இதில் தொடர்பில்லை" என்று ராஜேஷ் கூறியுள்ளார். ஆனால் நவம்பர் 18ம் தேதி, 2019 அன்று எம்.எல்.ஏவுடன் தொடர்புடைய மான் ஷாரதா சேவா அறக்கட்டளை பர்ஹாதா மஞ்சாவில் ரூ. 73.95 லட்சம் மதிப்புள்ள 9860 சதுர மீட்டர் நிலத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.




  1. தீபக் குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஐஜி) ஜூலை 26, 2020 முதல் மார்ச் 30, 2021 வரை. இப்போது டிஐஜி, அலிகார்.


அவரது மனைவியின் சகோதரி மஹிமா தாக்கூர், செப்டம்பர் 1, 2021 அன்று பர்ஹாதா மஞ்சாவில் 1,020 சதுர மீட்டர் இடத்தை எம்ஆர்விடி நிறுவனத்திடமிருந்து ரூ.19.75 லட்சத்திற்கு வாங்கினார்.


தீபக் குமாரின் கருத்து: "நான் அயோத்தியில் பணியாற்றிய காலத்தில் என்னுடைய உறவினர்கள் யாரும் அங்கே நிலம் வாங்கவில்லை. நான், என்னுடைய மனைவி அல்லது என்னுடைய தந்தையோ அங்கே நிலம் வாங்க பணம் ஏதும் தரவில்லை. என்னுடைய சகளை (மஹிமா தாக்கூரின் கணவர்) குஷிநகரைச் சேர்ந்தவர், இப்போது பெங்களூரில் வசிக்கிறார். குஷிநகரில் உள்ள நிலத்தை விற்றுவிட்டு அயோத்தியில் நிலம் வாங்கியிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். எனக்கும் இந்த நிலத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.



  1. உமாதர் திவேதி, உபி கேடரின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, லக்னோவில் வசிக்கிறார்.


அக்டோபர் 23, 2021 அன்று பர்ஹாதா மஞ்சாவில் 1,680 சதுர மீட்டர் இடத்தை MRVT நிறுவனத்திடமிருந்து ரூ.39.04 லட்சத்திற்கு வாங்கினார்.


உமாதரின் கருத்து: "அந்த நிறுவனத்தின் மீது வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் நான் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எந்த உதவியையும் பெற்று இந்த நிலத்தை வாங்கவில்லை" என்று கூறினார்



  1. வேத் பிரகாஷ் குப்தா, எம்எல்ஏ (அயோத்தி).


அவரது சகோதரன் மகன் தருண் மிட்டல் நவம்பர் 21, 2019 அன்று பர்ஹாதா மஞ்சாவில் 5,174 சதுர மீட்டர் இடத்தை ரேணு சிங் மற்றும் சீமா சோனியிடம் இருந்து ரூ.1.15 கோடிக்கு வாங்கினார். டிசம்பர் 29, 2020 அன்று, கோயில் இடத்திலிருந்து கிட்டத்தட்ட 5 கிமீ தொலைவில் உள்ள சர்யு ஆற்றின் எதிர்க்கரையில் உள்ள மகேஷ்பூரில் (கோண்டா) 14,860 சதுர மீட்டர் இடத்தை ஜகதம்பா சிங் மற்றும் ஜதுநந்தன் சிங் ஆகியோரிடமிருந்து ரூ. 4 கோடிக்கு வாங்கினார்.


குப்தாவின் கருத்து: "நான் எம்.எல்.ஏவாக பணியாற்றி வரும் கடந்த 4 வருடங்களில் ஒரு நிலமும் நான் வாங்கவில்லை. அயோத்தியின் எம்.எல்.ஏவாக இருக்கும் நான் நாட்டின் அனைத்து பகுதியில் இருக்கும் மக்களையும் அயோத்திக்கு வருகை தாருங்கள், நிலங்கள் வாங்குங்கள் என்று ஊக்குவிப்பேன்" என்று கூறினார். தன்னுடைய சகோதரன் சந்திர பிரகாஷ் குப்தா, எங்களிடம் ஒரு மாட்டுத் தொழுவம் உள்ளது, தற்போது 20 பசுக்கள் உள்ளன. மகேஷ்பூரில் நான்கைந்து பேர் சேர்ந்து நிலம் வாங்கியுள்ளோம் என்று கூறியதாக குப்தா கூறினார்.



  1. ரிஷிகேஷ் உபாத்யாய், மேயர், அயோத்தி.


தீர்ப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 18, 2019 அன்று 1,480 சதுர மீட்டர் நிலத்தை ஹரிஷ் குமார் என்பவரிடம் இருந்து இருந்து 30 லட்ச ரூபாய்க்கு வாங்கினார். ஜூலை 9, 2018 அன்று, பரம்ஹன்ஸ் ஷிக்ஷன் பிரஷிக்ஷன் மகாவித்யாலேயின் மேலாளராக இருக்கும் அவர் அயோத்தியில் உள்ள காசிபூர் சிட்டவனில் 2,530 சதுர மீட்டர் இடத்தை ரமேஷிடம் இருந்து நன்கொடையாக பெற்றுக் கொண்டார். அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் நிலத்தின் மதிப்பு ரூ.1.01 கோடியாகும்.


ரிஷிகேஷின் கருத்து: "நான் முதலில் என்னுடைய நிலத்தை ஹரிஷ் குமாருக்கு விற்றேன். பிறகு அவரிடம் இருந்ந்து மறுபடியும் வாங்கிக் கொண்டேன். காசிப்பூர் சிட்டவன் நிலம் 2006ம் ஆண்டு முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்னுடைய கல்லூரிக்காக வாங்கியது" என்று கூறினார்.




  1. ஆயுஷ் சௌத்ரி, முன்னாள் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட், அயோத்தி, இப்போது கான்பூரில் இருக்கிறார்.


மே 28, 2020 அன்று, சவுத்ரியின் உறவினர் ஷோபிதா ராணி, அயோத்தியில் உள்ள பிரௌலியில் 5,350 சதுர மீட்டர் இடத்தை ஆஷாராமிடம் இருந்து ரூ.17.66 லட்சத்திற்கு வாங்கினார். நவம்பர் 28, 2019 அன்று, ஷோபிதா ராணியால் நடத்தப்படும் ஆரவ் திஷா கம்லா அறக்கட்டளை, அயோத்தியில் உள்ள மாலிக்பூரில் உள்ள 1,130 சதுர மீட்டர் இடத்தை தினேஷ் குமாரிடமிருந்து ரூ.7.24 லட்சத்திற்கு வாங்கியது.


ஆயுஷின் கருத்து: "தனக்கும் ராணிக்கோ அவரின் அறக்கட்டளைக்கோ எந்த வித தொடர்பும் இல்லை, ராணியின் கணவர் ராம் ஜென்ம் வெர்மா ஆயூஷ் என்னுடைய மனைவியின் உறவினர். நாங்கள் அறக்கட்டளையை நிறுவியுள்ளோம்" என்று தெரிவித்தார்.



  1. அரவிந்த் சௌராசியா, வட்ட அதிகாரி, மாகாண போலீஸ் சேவை அதிகாரி, இப்போது மீரட்டில்.


ஜூன் 21, 2021 அன்று, பூபேஷ் குமாரிடமிருந்து அயோத்தியில் உள்ள ராம்பூர் ஹல்வாரா உபர்ஹர் கிராமத்தில் 126.48 சதுர மீட்டர் நிலத்தை ரூ.4 லட்சத்திற்கு அவரது மாமனார் சந்தோஷ் குமார் வாங்கினார். செப்டம்பர் 21, 2021 அன்று, அவரது மாமியார் ரஞ்சனா சவுராசியா கர்கானாவில் 279.73 சதுர மீட்டர் நிலத்தை பாகீரதியிடம் இருந்து ரூ.20 லட்சத்திற்கு வாங்கினார். 


அரவிந்தின் கருத்து: "எனது மாமனார் மத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர். அவர்கள் அயோத்தியில் ஆசிரமம் அமைக்க விரும்புகிறார்கள். ஆசிரியராக இருக்கும் என் மாமியார் ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் அங்கு குடியேற விரும்புகின்றனர்" என்று அரவிந்த் கூறியுள்ளார்.



  1. ஹர்ஷ்வர்தன் ஷாஹி, மாநில தகவல் ஆணையர்


நவம்பர் 18, 2021 அன்று, அவரது மனைவி சங்கீதா ஷாஹி மற்றும் அவர்களது மகன் சஹர்ஷ் குமார் ஷாஹி ஆகியோர் அயோத்தியில் உள்ள சரைராசி மஞ்சாவில் 929.85 சதுர மீட்டர் நிலத்தை, இந்திர பிரகாஷ் சிங்கிடம் இருந்து ரூ.15.82 லட்சத்திற்கு வாங்கியுள்ளனர்.


ஹர்ஷ்வர்தனின் கருத்து: "நான் இங்கே வாழ விரும்புகிறேன் என்பதால் நிலம் வாங்கினேன். விரைவில் இங்கே வீடு ஒன்று கட்டி என்னுடைய குடும்பத்தினருடன் வாழ இருக்கிறேன்" என்று ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.



  1. பல்ராம் மௌரியா, உறுப்பினர், மாநில ஓபிசி கமிஷன்.


பிப்ரவரி 28, 2020 அன்று கோண்டாவின் மகேஷ்பூரில் 9,375 சதுர மீட்டர் நிலத்தை ஜகதம்பா மற்றும் திரிவேணி சிங்கிடம் இருந்து ரூ.50 லட்சத்திற்கு வாங்கியுள்ளார் பல்ராம்.


பல்ராமின் கருத்து: "இப்பகுதியில் நிலம் வாங்கியுள்ளவர்கள் தங்களின் கட்டிடங்களை கட்ட துவங்கிய பிறகு வங்கி கடன் உதவியுடன் நான் அங்கே ஹோட்டல் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளேன்" என்று பல்ராம் கூறியுள்ளார்.



  1. பத்ரி உபாத்யாய், கஞ்சா கிராமத்தைச் சேர்ந்த லெக்பால் (சமீபத்தில் மாற்றப்பட்டார்).


மார்ச் 8, 2021 அன்று, ஷ்யாம் சுந்தர் என்பவரிடம் இருந்து அவரது தந்தை வசிஷ்த் நரேன் உபாத்யாய் 116 சதுர மீட்டர் நிலத்தை கஞ்சா பகுதியில் வாங்கினார். லேக்பால் என்பது நில பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கும் வருவாய் அதிகாரி.


பத்ரியின் கருத்து: "என்னிடம் பணம் உள்ளது. நான் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்குவேன். இதில் எந்த முரண்பாடும் இல்லை" என்று கருத்து தெரிவித்துள்ளார்.



  1. சுதன்ஷு ரஞ்சன், கஞ்சா கிராமத்தின் கனூங்கோ. கனூங்கோ ஒரு வருவாய் அதிகாரி, அவர் லெக்பால்களின் பணிகளை மேற்பார்வை செய்கிறார்


மார்ச் 8, 2021 அன்று, ரஞ்சனின் மனைவி அதிதி ஸ்ரீவஸ்தவ் கஞ்சாவில் 270 சதுர மீட்டர் இடத்தை ரூ.7.50 லட்சத்திற்கு வாங்கினார்.


சுதன்ஷு ரஞ்சனின் கருத்து: சுதன்ஷூ இந்த பரிவர்த்தனையை மறுத்துள்ளார். எதுவானாலும் என்னுடைய கணவனிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சுதன்ஷூவின் மனைவி கூறினார்.



  1. பான் சிங்கின் தினேஷ் ஓஜா (பேஷ்கர்), MRVTக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உதவி பதிவு அதிகாரி.


மார்ச் 15, 2021 அன்று, அவரது மகள் ஸ்வேதா ஓஜா, திஹுரா மஞ்சாவில் 2542 சதுர மீட்டர் நிலத்தை மஹ்ராஜ்தீனிடமிருந்து ரூ. 5 லட்சத்திற்கு வாங்கினார். இந்த பகுதியானது பான் சிங்கின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினேஷின் கருத்து: "இந்த நிலத்தில் பிரச்சனை ஏதும் இல்லை. அதே போன்று என்னுடைய பெயரிலும் நிலம் வாங்கவில்லை" என்று தினேஷ் கூறியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் இந்த செய்தியை பதிவுசெய்துள்ளது.