எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்


குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்காவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பதவி விலகல்?:


திரிணாமுல் காங்கிரஸ் துணை தலைவர் பதவியிலிருந்து யஷ்வந்த சிங்கா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் விலகல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி, எனக்கு அளித்த  கெளரவத்திற்காக, நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக திரிணாமுல் கட்சியிலிருந்து விலகுகிறேன். தற்போது, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காகப் பாடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த முடிவை மம்தா பானர்ஜி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன் என யஷ்வந்த சிங்கா தெரிவித்துள்ளார். இந்த முடிவின் அடிப்படையில், அவர் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக கருதப்படுகிறது.


3 பேர் மறுப்பு தெரிவித்தனர்.


கடந்த 15 ஆம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்ற வகையில் பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சரத் பவார் மறுத்துவிட்டார். அதையடுத்து தேசியவாத மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மாறும் கோபால கிருஷ்ண காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் கசிந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, பரூக் அப்துல்லா-வும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்பதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இந்நிலையில், நேற்று, காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு தெரிவித்துள்ளது, எதிர்க்கட்சிகளுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.


அறிவிக்க வாய்ப்பு:


எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய இன்று கூட்டம் நடைபெறும் நிலையில் யஷ்வந்த் சிங்கா பதவி விலகியிருப்பது மற்றும் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில், அவர் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.