அதிமுகவை அழிக்க சிலர் நினைப்பதாகவும் அது முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அதிமுக தொழில்நுட்ப பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் அது முடியாது, நான் முன்னின்று காத்து நிற்பேன் என்று தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி எடப்பாடி பழனிசாமி உற்சாகபடுத்தியதாக கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ட்விட்டர் பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த வீடியோவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளிடையே பேசுகிறார். அதில், “அதிமுக பலம் பொருந்திய கட்சி. அந்த கட்சி எந்த காலத்திலும் வீழ்ந்ததா சரித்திரமே இல்லை. அதிமுகவை அழிக்க சிலர் முயற்சி எடுக்கிறார்கள். அவற்றை முறியடித்து உங்கள் துணை கொண்டு அதிமுக எதிர்க்காலத்தில் பலம் பொருந்திய கட்சியாக இருக்கும். அதை உருவாக்குவதற்கு உங்க ஐ.டி.விங்க் முறையான பங்களிப்பை வழங்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.