சென்னை மணலியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பவானி என்பவர்,  ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் பணத்தை இழந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஏற்கனவே தமிழகத்தில் இவ்வாறான தற்கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், பெண் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் பணத்தினை இழந்து தற்கொலை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் பணத்தினை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிகை அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியுருப்பதாவது


ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.  எண்ணற்ற குடும்பங்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன.


ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் ஒருநாளில் மட்டுமே பலமுறை வந்து எளிதாக சம்பாதிக்கலாம் என்று ஆசையை கிளறிவிட்டுக் கொண்டிருக்கின்றன.இச்சூழலில், சென்னை மணலியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பவானி என்பவர்,  ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் பணத்தை இழந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் மன வேதனையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.


தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த அப்பெண், ரம்மி விளையாட்டிற்காக தனது 20 சவரன் நகைகளை விற்றதும், தனது சகோதரிகளிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்ததும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. தற்கொலை செய்துக் கொண்ட பவானிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தாயின்றி அக்குழந்தைகள் எப்படி வளர போகிறார்கள், அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது.


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை மட்டுமல்ல, இதனோடு ஆபாச இணையதளங்களின் நவீன பரிணாமத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆன்லைன் பாலுறவு எனும் புதிய வக்கிரம், ஆபாச இணையதள கார்ப்பரேட் முதலாளிகளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இலட்சக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.


ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி மாநில அரசுகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தாலும், அவ்வழக்குகளில் ஆஜராகவும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் மூத்த வழக்கறிஞர்களால் சுக்குநூறாக்கப்படுகின்றன.


இதனை நாம் கவனிக்கும் போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது என்பது சாதாரண விசயம் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.


எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யக் கோரி சட்டரீதியாக வழக்கு தொடுப்பது, போராடுவது என்ற வரம்போடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்காக ஒருமித்த கருத்துள்ள ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து, சூதாட்ட தடைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.


அப்படி இல்லையென்றால், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வராதவரை மாநில அரசுகள் எப்படிப்பட்ட தடைச்சட்டம் போட்டாலும் அவை நீதிமன்றங்கள் மூலம் செல்லாததாக்கப்படும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.