சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். ‘கோர்டிலியா குரூஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொகுசு கப்பல் சுற்றுலா சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.


சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை வரும் 2 நாள் சுற்றுலா திட்டமும், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி வழியாக மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் திட்டமும் இந்த சொகுசு கப்பலில் இயக்கப்படவுள்ளன. 2 நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 நபருக்கு ரூ.40 ஆயிரம், அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவும் அடங்கும்.




சுமார் 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 11 தளங்கள் கொண்டது. ஒரே நேரத்தில் 1,950 பயணிகள் உட்பட 2,500 பேர் வரை பயணிக்க முடியும். இதில் மொத்தம் 796 அறைகள் உள்ளன. இதுதவிர கலையரங்கம், 4 பெரிய உணவகங்கள், மதுக்கூடம், உடற்பயிற்சி மையம், ஸ்பா, மசாஜ் நிலையம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. மேலும், கப்பலில் விருந்து கொண்டாட்டங்கள், திருமணங்கள், அலுவல் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என கப்பல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதவது:-


புதுச்சேரி மீன்பிடித்துறைமுகத்தில் என்.சி.சி மாணவர்களின் சாகச பயணத்தை துவக்கி வைத்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரியின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தொடர் நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றது. இதற்காக மத்திய அமைச்சர்கள் அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து திட்டங்கள் செய்லபடுவதை ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பிராந்தியமான காரைக்கால் மாவட்டம் எந்தவகையிலும் புறக்கணிக்கப்படவில்லை.




சென்னையில் நேற்று முந்தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த சொகுசு கப்பல் புதுச்சேரி வரை செல்கின்றது என அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வருவது தொடர்பாக எந்தவித அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை அது தொடர்பான கோப்புகள் எதுவும் வரவில்லை என்றவர்.


வருங்காலத்தில் புதுச்சேரி சார்பில் இது போன்ற சொகுசு கப்பல்கள் விடப்பட்டாலும் சரி, சொகுசு கப்பல்களை அனுமதிக்கப்பட்டாலும் அதில் கலாச்சார சீர்கேடு இல்லாமலும் இளைஞர்களை பாதிக்கும் எந்தவிஷயத்தையும் அனுமதிக்க மாட்டோம் என தமிழிசை உறுதியளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரியில் குரங்கு அம்மை போன்ற எந்தவித அறிகுறி எதுவும் இல்லை என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.