புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் உள்ள சுகாதார நலவழி மையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும். இதை முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சரவை அறையில் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, 17 லட்சம் செலவில் புதுச்சேரியில் 21 ஆரம்ப சுகாதார நிலையம், நலவழி மையங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகள் எவ்வாறு கவனிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு என்ன மருத்துவ வசதிகள் தரப்படுகிறது என அறியலாம். காரைக்காலிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும். உயர் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் அரசு உருவாக்கி வருகிறது என்றார்.




சுகாதாரத்துறை மூலம் நாளை முதல் 3 நாட்களுக்கு மத்திய சுகாதாரத்துறையின் மூலம் சுகாதார திருவிழா நடத்தப்படுகிறது. நாளை மதியம் 12.30 மணிக்கு தொடங்கி நாள்தோறும் இரவு 8 மணி வரை திருவிழா நடைபெறும். இதில் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். நோயாளிகள் தங்களுக்கு தேவையான சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகளையும் பெறலாம். சுகாதார திருவிழாவில் கண்காட்சியும் அமைத்துள்ளோம். கண்காட்சியில் பாரம்பரிய உணவு முறைகள், சத்தான உணவு வகை பற்றிய காட்சிகள் இடம்பெறும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.


பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேனர்களும் அகற்றப்பட்டு வருகிறது என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் மாநில அந்தஸ்து, கூடுதல் நிதி கேட்டு வலியுறுத்தி உள்ளோம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி கிடைக்கும். ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயலர் இணைந்து செயல்பட வேண்டும். ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுதான் ஆகிறது. இன்னும் பல வளர்ச்சிகளை அடுத்து  வரும் ஆண்டுகளில் அரசு செய்யும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.


தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம், புதிதாக 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை, ரூ.500 உதவித்தொகை உயர்வு, இலவச அரிசி, பொங்கல் பொருட்கள், பண்டிகை கால துணிகள் வழங்கியுள்ளோம். இன்னும் 4 ஆண்டு மீதமுள்ளது. ஒரே ஆண்டில் 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப முடியாது. அடுத்தபடியாக எல்டிசி, யூடிசி தேர்வு நடத்த உள்ளோம். சுருக்கெழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது. சுகாதாரத்துறையில் டாக்டர்கள், நர்சுகள் எடுத்துள்ளோம் என அரசின் நடவடிக்கைகளை பட்டியலிட்டார் ரங்கசாமி.




தலைமை செயலரின் புதுச்சேரி பணிக்காலம் நிறைவுபெற்றதால் மத்திய உள்துறை மாற்றம் செய்துள்ளது. மத்திய அரசின் உதவியோடு அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம். பிரதமர் மோடி வாக்குறுதியளித்தபடி பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும் முதல்வர் கூறினார். முதல்வர் முடக்கப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி குற்றச்சாட்டை மறுத்த ரங்கசாமி, முதல்வர் செயல்படாமல் இருந்திருந்தால் கடந்த ஓர் ஆண்டில் எப்படி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியும் என பதில் கேள்வி எழுப்பினார். புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று உறுதியளித்த முதல்வர் ரங்கசாமி, பிரதமரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல், புன் சிரிப்புடன் பேட்டியை முடித்துகொண்டார்.